Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM
தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கி அண்மையில் கைதான மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவிஇயக்குநரின் வங்கி லாக்கர்களில்இருந்து ரூ.2.27 கோடி ரொக்கம், 173 பவுன் நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், 10 வங்கிக் கணக்குகளில் ரூ.1.12 கோடி இருந்ததைக் கண்டறிந்து, அந்த கணக்குகளை முடக்கிவைக்க உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சி காட்டூர் விக்னேஷ் நகரில் வசித்து வருபவர் ஆர்.நாகேஸ்வரன்(52). இவர், தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், வணிக வளாகம்கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்குவதற்காக, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நாகேஸ்வரனை தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த பிப்.25-ம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது, திருச்சி காட்டூரிலுள்ள நாகேஸ்வரனின் வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் 50 பவுன் நகைகள், ரூ.14லட்சம் ரொக்கம் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், நாகேஸ்வரன் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவுடிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடேஷ், பத்மாவதி, சசிகலா ஆகியோரைக் கொண்ட குழுவினர், திருச்சியில் நாகேஸ்வரனிடம் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, நாகேஸ்வரன், அவரது மனைவி ஜாஸ்மின் ஆகியோரின் வங்கிக்கணக்குகளை ஆய்வு செய்தஅதிகாரிகள், வங்கி லாக்கர்களையும் திறந்து சோதனை நடத்தினர்.
இதில், திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஒரு வங்கியின் லாக்கரில் ரூ.1.90 கோடி ரொக்கமும், திருவெறும்பூரில் உள்ள ஒரு வங்கியின் லாக்கரில் ரூ.37 லட்சம் ரொக்கமும் இருந்தது. மேலும், 2 லாக்கர்களிலும் 173 பவுன்நகைகள் மற்றும் ரூ.23 லட்சத்துக்கு நிரந்தர வைப்பு தொகைக்கான ஆவணங்களும் இருந்தன. இவை அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், நாகேஸ்வரன் பெயரில்10 வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளில் ரூ.1.12 கோடி இருந்ததைக் கண்டறிந்து, அந்த சேமிப்புக் கணக்குகளை முடக்கிவைக்க உத்தரவிட்டுள்ள போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT