சாலை விபத்தில் திமுக எம்.பி-யின் தந்தை உயிரிழப்பு :
திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை. இவரது தந்தை சி.நடராஜன்(77).
இவர் துரிஞ்சாபுரம் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர். இவர், கடந்த மாதம் 24-ம்தேதி வேலூர் சாலையில் உள்ள மல்லவாடி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அரசுப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் நடராஜன் படுகாயமடைந்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நடராஜன் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கு.பிச்சாண்டி, திமுக மருத்துவர் அணி மாநில துணைத் தலைவர் கம்பன் மற்றும் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது.
இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
