

சேலம் அருகே இரவு நேரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்பட்டதாக வாட்ஸ்அப்பில் வீடியோ வைரலான விவகாரம் தொடர்பாக வங்கிக் கிளை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் உடையாப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் சில நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் வங்கி கதவு மூடப்பட்டிருந்த நிலையில், வங்கியின் உள்ளே பொதுமக்கள் சிலரும், ஊழியர்களும் இருந்த வீடியோவாட்ஸ்அப்பில் வைரலானது.
மேலும், தமிழக அரசு பயிர்க் கடன்,நகைக்கடன் தள்ளுபடி அறிவித்தநிலையில், முன்தேதியிட்டு சிலருக்குநகைக்கடன் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கூட்டுறவு சங்கப்பதிவாளர்கள் இருவர் தலைமையில் சர்ச்சைக்குரிய வங்கி கிளையின் ஆவணங்களை ஆய்வு செய்து விசாரிக்க கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், வங்கிக் கிளை மேலாளர் கேசவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கூட்டுறவுத் துறைஉயர் அதிகாரிகள் கூறும்போது, “கூட்டுறவு சங்கப் பதிவாளர்கள் நடத்திய விசாரணையில், நகைக்கடன் வழங்கியது உறுதியாகவில்லை. எனினும், நிர்வாக அனுமதியின்றி வங்கி இரவு நேரத்தில் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதால், கூட்டுறவு வங்கித் தலைவரால், வங்கிக் கிளை மேலாளர் கேசவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.