ஜோதிடத்தின் மீதான அதீத நம்பிக்கையால் - மகனை எரித்து கொன்ற தந்தை கைது :

ராம்கி
ராம்கி
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம்கி(29). இவரது மனைவி காயத்ரி. இவருடைய மூத்த மகனுக்கு 5 வயதாகிறது. இரண்டாவது மகனுக்கு 3 மாதம் ஆகிறது.

ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநரான ராம்கி, ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவராக இருந்துள்ளார். இதனால், பல்வேறு ஜோதிடர்களை அவர் சந்தித்து தனது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். அப்போது, அவரது மூத்த மகன் இருக்கும் வரைஅவருக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்காது, அதிக பிரச்சினைகள் ஏற்படும் என சில ஜோதிடர்கள் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, மூத்த மகனை 15 ஆண்டுகளுக்கு ஹாஸ்டலில் தங்கவைக்கப் போவதாக காயத்ரியிடம் ராம்கி கூறியுள்ளார். இதுதொடர்பாக ராம்கி-காயத்ரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிப். 26-ம் தேதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராம்கி, மூத்த மகனை உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கூறி,மனைவி காயத்ரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அருகில் இருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து மூத்த மகன் மீது ஊற்றிதீ வைத்துள்ளார்.

இதில், சிறுவனுக்கு தீக்காயம்ஏற்பட்டது. இதைப்பார்த்த காயத்ரியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுவனை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், 90 சதவீத தீக்காயங்கள் இருந்ததால், சிறுவனை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக நன்னிலம் போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பிப்.27-ம் தேதி ராம்கியை கைது செய்து விசாரித்தனர். அப்போது, மூத்தமகனால் தனக்கு அதிக பிரச்சினைகள் வரும் என ஜோதிடர்கள் கூறியதால், சிறுவனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாக ராம்கி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, போலீஸார் ராம்கியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மன்னார்குடி கிளைச் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, ராம்கி மீதான வழக்கைகொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஜோதிடர்கள் கூறியதால், பெற்ற மகனையே தந்தை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் நன்னிலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in