

மக்கள், மண், மொழி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கவே திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த அரசிடம் பணம் இல்லை. பயிர்க்கடன் ரூ.12,500 கோடி தள்ளுபடி என கூறிவிட்டு, நிதிநிலை அறிக்கையில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.5.70 லட்சம் கோடி கடனில் உள்ள தமிழக அரசு, எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாமல் உள்ள நிலையில், கடன் தள்ளுபடி அறிவிப்பை எப்படி செயல்படுத்த முடியும். இது தேர்தலுக்கான அறிவிப்பு.
மக்கள், மண், மொழி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவும், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவும் திமுக கூட்டணியில் இருக்கிறோம். திமுக-வுடனான கூட்டணிபேச்சுவார்த்தைக்கு 2 நாட்களில் செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.