ஜெயலலிதா சிலை அருகே கட்டப்பட்டிருந்த அமமுக கொடிகளை அகற்றிய அதிமுகவினர் தஞ்சையில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு

தஞ்சாவூரில் நேற்று தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட அதிமுகவினரையும், அமமுகவினரையும் சமாதானப்படுத்தும் போலீஸார்.
தஞ்சாவூரில் நேற்று தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட அதிமுகவினரையும், அமமுகவினரையும் சமாதானப்படுத்தும் போலீஸார்.
Updated on
1 min read

தஞ்சாவூரில் ஜெயலலிதாவின் சிலை அருகே கட்டப்பட்டிருந்த அமமுக கொடிகளை அதிமுகவினர் நேற்று அகற்றியதால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள அவரது சிலைக்கு அமமுகவினர் நேற்று மாநகரச் செயலர் ராஜேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதையொட்டி, அப்பகுதியில் அமமுக கட்சிக் கொடிகள் ஏராளமாக கட்டப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து, அதிமுகவினர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்க வருவதால், அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த அமமுக கொடிகளை அகற்றிவிடும்படி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அமமுகவினர், அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால், அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

பின்னர், ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுகவினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது, சிலையின் அருகேகட்டப்பட்டிருந்த அமமுக கொடிகளை அதிமுகவினர் கழற்றி வீசினர். இதற்கு அமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக, இருதரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்தினர்.

பின்னர், அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அமமுக கொடிகளை அதிமுகவினர் அகற்றினர். அப்போது, ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி ஆகியோரை வாழ்த்தி அதிமுகவினரும், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை வாழ்த்திஅமமுகவினரும் முழக்கங்களை எழுப்பியதால் அங்கேபரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in