

குடிபோதையில் ஓட்டலில் தகராறு செய்தவரைக் கண்டித்ததால், சரக்கு வேனை மோதவிட்டு காவல் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்டார்.
ஏரல் அருகேயுள்ள தீப்பாச்சி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல் (39). இவர், வாழவல்லான் கிராமத்தில் இருசக்கர வாகன பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஏரலில் உள்ள ஒரு கடையில் தகராறு செய்துள்ளார். தகவல் அறிந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு (55) அங்கு சென்று, முருகவேலை எச்சரித்து அனுப்பியுள்ளார். ஆனால், ஏரல் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஓட்டலுக்குச் சென்ற முருகவேல், அங்கும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அங்கு சென்ற எஸ்ஐ பாலு, முருகவேலைப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார். பின்னர், அவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார்.
நள்ளிரவில், எஸ்ஐ பாலுவும், தலைமைக்காவலர் பொன் சுப்பையாவும், ஒரு மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர். மோட்டார் சைக்கிளை பொன் சுப்பையா ஓட்டியுள்ளார். அவர்கள், நேற்று அதிகாலை 1 மணியளவில் வாழவல்லானுக்கு சென்றபோது முருகவேல் அங்கு நின்று கொண்டிருந்தார். அவரை, எஸ்ஐ பாலு மீண்டும் எச்சரித்துவிட்டு ரோந்து பணியைத் தொடர்ந்தார்.
சற்று தூரம் அவர்கள் சென்ற நிலையில், சரக்கு வேனை வேகமாக ஓட்டிவந்த முருகவேல், எஸ்ஐ பாலு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதவிட்டார். படுகாயமடைந்த பாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைமைக்காவலர் பொன் சுப்பையா லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பாலுவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவரது உடலை, ஐஜி முருகன், டிஐஜி ராஜேந்திரன், எஸ்பி ஜெயக்குமார் மற்றும் போலீஸார் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றினர்.
பாலுவின் சொந்த ஊரான தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர். கொலை செய்யப்பட்ட எஸ்ஐ பாலுவுக்கு பேச்சியம்மாள் (50) என்ற மனைவியும், அருள் வேலாயுதம் என்ற மகனும், ஜெய துர்காவேணி என்ற மகளும் உள்ளனர்.
தப்பியோடிய முருகவேலை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று காலை 11 மணியளவில் முருகவேல் விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் சரண் அடைந்தார். அவரை பிப்.5 வரை காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணக்குமார் உத்தரவிட்டார். முருகவேல் தூத்துக்குடி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.
மனைவி தற்கொலை முயற்சி
முருகவேல் மீது குற்றவழக்குகள் ஏதுமில்லை. மதுதான் அவரை இந்த கொடூர செயலைச் செய்யத் தூண்டியுள்ளது. மதுவால் தனது குடும்பத்தினரின் வாழ்க்கையையும் முருகவேல் அழித்துக் கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.