Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

அதிமுக ஆட்சியின் தனி மனித துன்பங்கள் திமுக ஆட்சியில் துடைக்கப்படும் திருவண்ணாமலை பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி

அதிமுக ஆட்சியில் உள்ள தனி மனித துன்பங்கள் திமுக ஆட்சி அமைந்ததும் துடைக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று தொடங்கியது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து கடந்த 25-ம் தேதி, எனது அரசின் முதல் 100 நாட்களில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் திட்டங்களை செயல்படுத்தி கொடுத்தவர் கருணாநிதி. அவரது வழியில் வந்த நான் உறுதிமொழியை கோபாலபுரம் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன்.

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் பயன்பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது. ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், சென்னையில் உள்ள பாலங்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், சென்னையைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் என கொண்டு வரப்பட்டன. அதுபோன்ற வளர்ச்சியை மீண்டும் உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.

பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தொழிற்சாலைகளை உருவாக்குவது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக ஆட்சியில் உள்ள தனி மனித துன்பங்கள் திமுக ஆட்சி அமைந்ததும் துடைக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுகஆட்சியில், தமிழகத்தில் எல்லா துறைகளும் அதல பாதாளத்துக்கு போய்விட்டன. மக்கள் விரும்பும் அரசாக, கவலைகளை போக்கக்கூடிய அரசாக திமுக அரசுஅமையும். உங்களது மனுக்களை என் முதுகில் ஏற்றி வைத்துள்ளீர்கள். நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையுடன் செல்லுங்கள். திமுக ஆட்சிதான் அமையும்.உங்கள் கவலைகள் யாவும் தீரும். மக்களின் மனுக்கள் அனைத்தும் பெட்டியில் போட்டு மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், நான் பதவி ஏற்ற மறுநாள், பெட்டி திறக்கப்பட்டு மனுக்களை எடுத்து நிறைவேற்றுவேன். இதற்காக தனித்துறை அமைக்கப்படும். சிறப்புகுழு அமைத்து மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x