Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

போயஸ் தோட்டம் `வேதா நிலையம்’ இல்லம் அரசுடமையாக்கப்பட்டு சீரமைப்பு ஜெயலலிதா நினைவில்லத்தை முதல்வர் திறந்தார் துணை முதல்வர், பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லம். (அடுத்த படம்) ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர். படங்கள்: க.பரத்

சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த ‘வேதா நிலையம்’ இல்லத்தை அவரது நினைவில்லமாக முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். நீதிமன்ற உத்தரவையடுத்து பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் வேதா நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தமிழக முதல்வராக பதினைந்தரை ஆண்டுகள் பதவி வகித்த ஜெயலலிதா, கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் அவர் வசித்து வந்த ‘வேதா நிலையம் ’ இல்லம், அரசுடமையாக்கப்பட்டு நினைவில்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த 2017 ஆகஸ்ட் 17-ம் தேதி அறிவித்தார். அதன்பின், வேதா நிலையம் இல்லத்தை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்தனர். மக்கள் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.

வேதா நிலையம் மற்றும் அசையும் சொத்துகளை கையகப்படுத்துவதற்கான அவசரச் சட்டம் கடந்த ஆண்டு மே 22-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதில், வேதா நிலையம் மற்றும் அசையும் பொருட்களை தற்காலிகமாக தன் வசம் எடுத்துக் கொள்ளவும், வேதா நிலையத்தை நினைவகமாக மாற்றுவதற்கான நீண்டகால ஏற்பாடுகளுக்காக முதல்வர் பழனிசாமி தலைமையில் ‘புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 24-ம் தேதி வேதா நிலையத்தை அரசுடமை ஆக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான ஈடாக,ரூ.68 கோடியே 88 லட்சத்து 59 ஆயிரத்து 690 நகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வேதா நிலையம் அரசின் சொத்தாக்கப்பட்டது.

மொத்தம் 10 கிரவுண்ட் 322 சதுரஅடி பரப்பில் அமைந்துள்ள வேதா நிலையம் இல்லம், ஜெயலலிதா வாழ்ந்தபோது இருந்ததை போல,அதன் தன்மை மாறாமல் தமிழக அரசால் சீரமைக்கப்பட்டது. அவர்வாழ்ந்த அறை, நூலகம், அலுவலக அறை, விருந்தினர் காத்திருப்பு அறை, விருந்தினர் சந்திப்பு அறை, கூட்ட அரங்கு என அனைத்து பகுதிகளிலும் பூச்சு வேலைப்பாடுகள், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வேதா நிலையம் திறப்பு விழாவுக்கு தயாரானது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோரை ஜெயலலிதாவின் நேரடி வாரிசாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதை எதிர்த்து தீபக், தீபா இருவரும் தொடர்ந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சேஷசாயி, வேதா நிலையம் இல்லத்தின் பிரதான நுழைவு வாயில் கதவை மட்டும் திறக்கும் வகையில் திறப்பு விழா நிகழ்ச்சியை நடத்தலாம். கட்டிடத்தின் கதவுகளை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். அதன்பின், நேற்று முன்தினம் நள்ளிரவு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. அப்போது அவர், மேல்முறையீடு செய்ய அனுமதியளித்தார்.

இந்நிலையில், நேற்று காலை 10.45 மணிக்கு ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். முன்னதாக, காலை 8 மணி முதலே, கட்சியினர் அங்கு குவியத் தொடங்கினர். 9.30 மணி முதல் அதிமுக நிர்வாகிகள், பேரவைத் தலைவர் தனபால், துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர்கள் வேதா நிலையம் வந்தனர். காலை 10.35 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமியும் வந்தனர். வேதா நிலைய பிரதான வாயிலுக்குள் சென்ற அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். வேதா நிலையம் நினைவில்லமாக மாற்றப்பட்டதற்கான கல்வெட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து வேதா நிலையம் இல்லத்தின் கதவுகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த முதல்வர், உள்ளே குத்துவிளக்கைஏற்றி வைத்து பார்வையிட்டார்.

முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து சென்ற நிலையில், பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வேதா நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். ஆனால், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் கே.சண்முகம், பொதுப்பணித்துறை செயலர் கே.மணிவாசன், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், சென்னை ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x