

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று பழநியில் நடைபெற்ற தைப்பூசத் தேரோட்டத்தில் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு எருந்தளினார். மாலையில் மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை முடிந்து, சுவாமி அலைவாயுகந்த பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தைப்பூச மண்டபத்துக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி, கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்படி உள்பிரகாரத்தில் நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர், திருச்செந்தூர் கோயிலில் குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வேல்களால் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். கிரிபிரகாரத்தில் ஏராளமானோர் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அதிகாலையிலேயே கடலில் நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பழநி
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. நேற்று காலை முத்துக்குமாரசுவாமி சண்முகநதியில் எழுத்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் மாலை 4.35 மணியளவில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் யானை கஸ்தூரி தேரை பின்னால் இருந்து தள்ளிச்சென்றது. நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்து கோயில் முன் நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். அமைச்சர் சீனிவாசன், ஆட்சியர் மு.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.