Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

கடினமாக உழைத்தால் பிரகாசிக்கலாம் கிரிக்கெட் வீரர் நடராஜன் கருத்து

கடினமாக உழைத்தால் பிரகாசிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, சிறப்பாக விளையாடி தாயகம் திரும்பிய தருணம் மிகவும் நெகழ்ச்சியானது. நாட்டுக்காகவும், நான் பிறந்த சேலம் மண்ணுக்காகவும் பெருமை சேர்த்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது கடவுள் தந்த வரமாக கருதுகிறேன்.

ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்கு, ஐபிஎல் போட்டிகளில் 4 ஆண்டுகள் விளையாடியதில் கிடைத்த அனுபவமே காரணம். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள அனைவரின் கூட்டு முயற்சியே ஆஸ்திரேலிய அணியை வெற்றி கொள்ள காரணம். சகவீரர்கள் அன்புடனும், தோழமை உணர்வுடனும் என்னோடு பழகி ஆலோசனை வழங்கி வழிநடத்தினர்.

வார்னர் வாழ்த்து

ஆஸ்திரேலியா டி 20 போட்டியில் வெற்றியடைந்த நிலையில், கேப்டன் வீராட்கோலி கோப்பையை என் கைகளில் கொடுத்தபோது, மனம் நெகிழ்ந்து மகிழ்ச்சி பெருகியது. சன் ரைசர்ஸ் அணி கேப்டனும் ஆஸ்திரேலியா அணி வீரருமான வார்னர் ஏற்கெனவே என்னை வாழ்த்தினார். மகள் பிறந்த நேரம் ஜொலிக்கபோகிறாய் என ட்விட் செய்திருந்தார். அவரின் வாழ்த்து என்னை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கிராமத்தில் சாலையில் டென்னிஸ் பந்துகளில் கிரிக்கெட் விளையாடி வந்த நான் இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு முன்னேற கடின உழைப்பே காரணம். எனது பணியை சிறப்பாக செயல்படுத்த இரவு, பகல் பாராமல் பயிற்சியில் ஈடுபட்டதால் கிடைத்த பலனாக எண்ணுகிறேன்.

இளம் வீரர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கடினமாக உழைத்து, விடாமல் பயிற்சியில் ஈடுபட்டால் நிச்சயம் எந்த விளையாட்டிலும் சாதனை படைக்க முடியும். கிரிக்கெட் உலகில் என்னை கவர்ந்தவர் சச்சின் டெண்டுல்கர்.

கிராமப்புறம், நகர்புறம் என்றில்லாமல் பொதுவாக இளைஞர்கள் கடினமாக உழைத்தால் கிரிக்கெட்டில் பிரகாசிக்கலாம். அதற்கு எடுத்துக்காட்டு நானே. என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x