

ராமநாதபுரம் மாவட்டம்கீழக்கரை 500 பிளாட் பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜா ஷாகுல் ஹமீது(52). இவர் குவைத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறை முடிந்து நேற்று குவைத் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக இவர் கீழக்கரையில் இருந்து ஆம்னி வேன் மூலம் மதுரை விமான நிலையத்துக்குசென்று கொண்டிருந்தார். இவரை வழியனுப்பி வைப்பதற்காக மனைவி ரூபினா, மகள் ரஹ்மத் பாத்திமா, மகன் இனாஸ், மாமியார் ஷாஜகான் பீவி(60) ஆகியோரும் உடன் சென்றனர். கீழக்கரையைச் சேர்ந்த அகமது ஹாசன்(30) வேனை ஓட்டினார்.
சத்திரக்குடி தபால் சாவடி அருகே சென்றபோது எதிரே கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் இருந்து ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்த வேனும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் ஆம்னி வேனில் வந்த ஹாஜா சாகுல் ஹமீது, ஷாஜகான் பீவி, ஓட்டுநர் அகமது ஹாசன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரூபினா, ரஹ்மத் பாத்திமா, இனாஸ், கர்நாடக வேனில் வந்த 3 பேர் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.