Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

இலங்கை கடற்படையின் படகு மோதியதால் கடலில் மூழ்கி உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு அமைச்சர், ஆட்சியர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி

கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்.

புதுக்கோட்டை/ராமேசுவரம்

இலங்கை கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியதால் கடலில் மூழ்கி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோட்டைப்பட்டினத்துக்கு கொண்டு வரப்பட்ட உடல்களுக்கு அமைச்சர், ஆட்சியர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா(30), வி.நாகராஜ்(52), எஸ்.செந்தில்குமார்(32), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த என்.சாம்சன் டார்வின்(28) ஆகிய 4 மீனவர்கள் ஜன.18-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மறுநாள் அதிகாலை கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீனவர்களை கைது செய்வதற்காக தங்களது படகில் துரத்தினர்.

அப்போது, கடற்படையினரின் படகு மோதியதில் மீனவர்களின் படகு கவிழ்ந்து, அதில் இருந்த 4 பேரும் மாயமாகினர். பின்னர், நெடுந்தீவு அருகே அடுத்தடுத்த நாட்களில் 4 மீனவர்களையும் சடலங்களாக இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்பாணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு இலங்கை கடற்படையினரின் படகு மூலம் கடல் வழியாக கொண்டு வந்து, இந்தியா-இலங்கை சர்வதேச எல்லையில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், கோட்டைப்பட்டினத்தில் இருந்து விசைப்படகுகளில் சென்றிருந்த மீன்வளத் துறை அலுவலர்கள், போலீஸார் மற்றும் மீனவர்களிடம் சடலங்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

அந்த சடலங்கள் கோட்டைப்பட்டினம் கரைக்கு கொண்டுவரப்பட்டது. மீனவர்களின் உடல்களுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, எஸ்.பி எல்.பாலாஜி சரவணன், அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதி, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மீன்வளத் துறை துணை இயக்குநர் சர்மிளா, உதவி இயக்குநர் குமரேசன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், சக மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின், மீனவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் ராமநாதபுரத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்களின் உடல்களுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி கார்த்திக் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மீனவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தன. இறுதி ஊர்வலங்களில் ஏராளமான மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x