Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

அவனியாபுரத்தில் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல் காந்தி நாளை மதுரை வருகை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மதுரை வருகிறார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கூறியதாவது:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொங்கல் திருநாளான 14-ம் தேதி (நாளை) தமிழகம் வருகிறார். விவசாயிகளின் முக்கிய பண்டிகையான பொங்கல் நாளில் மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண்பதற்காக ராகுல் காந்தி வருகிறார்.

டெல்லியில் இருந்து நேரடியாக மதுரை வரும் அவர், நாளை காலை 11 மணிக்கு அவனியாபுரம் செல்கிறார். சுமார் 4 மணி நேரம் அங்கு இருக்கும் அவர், பின்னர் மதுரை வழியாக அன்றைய தினமே டெல்லி புறப்பட்டு செல்கிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே ராகுல் காந்தி வருகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அவரது தமிழக சுற்றுப்பயணத்துக்கு ‘ராகுலின் தமிழ்வணக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாகவே பொங்கல் நாளில் ராகுல் காந்திதமிழகம் வருகிறார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் ராகுல் காந்திசுற்றுப் பயணம் செய்யவிருக்கிறார். முதலில் மேற்கு மண்டலத்துக்கு வருகிறார். ராகுல் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள். தமிழகத்தில் ராகுல் காந்தியை மிகப்பெரிய அளவில் பயன்படுத்த இருக்கிறோம்.

திமுக கூட்டணி வலுவாக உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் என்பதை கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுவிட்டன. ஆனால், அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை.

அனைத்துக் கட்சிகளுமே அதிக தொகுதிகளிலும் போட்டியிடவே விரும்பும். அது இயற்கையானது. எவ்வளவு தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை இரு கட்சிகளும் பேசி முடிவு செய்யும். திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச மேலிடத் தலைவர்கள் விரைவில் தமிழகம் வருவார்கள்.

கரோனா தடுப்பூசி தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆர்), உலக சுகாதார நிறுவனம் சொல்வதை அனைவரும் ஏற்க வேண்டும். இது அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டது அல்ல. விஞ்ஞானிகள் சம்பந்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x