Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

பொங்கல் விழாவை சமத்துவ பொங்கலாக கொண்டாடுவோம் திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

பொங்கல் விழாவை சமத்துவப் பொங்கலாக கொண்டாட வேண் டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உலகின் மூத்த மொழியான தமிழின் சிறப்பை, அதன் பண்பாட்டு அடையாளங்களை, உழைக்கும் மக்களான உண்மையான விவசாயிகளின் பெருமையை உலகுக்கு உணர்த்தும்விழாவாக, தமிழர் திருநாளாகபொங்கல் விழா கொண்டாடப் படுவதை பண்பாட்டு மறுமலர்ச்சி யாக கட்டமைத்த வரலாற்றுச் சிறப்பு திராவிட இயக்கத்துக்கு உண்டு.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரும், தமிழ்ச்சான்றோர்கள் பலரும் அந்நிய - ஆரிய - வடமொழிப் பண்பாட்டினை எதிர்த்து, தமிழர்களின் தனித்த அடையாளமாக விளங்கும் பொங்கல் திருநாளை நமக்கான விழாவாக, தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பதை மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். திராவிட இயக்கத்தின் சார்பில், பொங்கல் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

அவரவர் வழிபடும் தெய்வங்களுக்கு அவரவர் விருப்பப்படி படையலிட்டு, உலகுக்கே வாழ்வளிக்கும் சூரியனை வணங்கி, உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி பாராட்டி, புது அரிசியில் பொங்கல் வைத்து ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொங்கல் விழா போலச் சிறப்பு மிக்க இன்னொரு விழாவை, பண்பாடு போற்றும் பண்டிகையைக் காண முடியாது.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது தை முதல் நாள்தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கருணாநிதிதான் தொடங்கினார். சனாதன பிரிவினைகளை அகற்றி, சமூகநீதியைப் போற்றி, மதவெறிக்கு உலை வைத்து, மதநல்லிணக்கம் எனும் மகிழ்ச்சி அனைத்து மக்களின் மனதிலும் பொங்கும் வகையில் ‘சமத்துவப் பொங்கல்’ விழாக்களை திமுகவினர் கொண்டாடுவது வழக்கம். அதே உணர்வுடன், பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவை சமத்துவப் பொங்கல் வைத்து இந்த ஆண்டும் திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

ஜனவரி 13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியிலும், 14-ம் தேதி ஆவடி தொகுதியிலும் நடக்கும் சமத்துவப் பொங்கல் விழாக்களில் நான் பங்கேற்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x