Published : 03 Jan 2021 03:21 AM
Last Updated : 03 Jan 2021 03:21 AM

மேட்டூர் அணையின் உபரிநீரை இணைக்கும் வகையில் ரூ.14,000 கோடியில் காவிரி-குண்டாறு திட்டம் ஜனவரி இறுதியில் தொடங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பரமக்குடி பேருந்து நிலையம் முன் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி. (அடுத்தபடம்) ராமநாதபுரத்தில் இஸ்லாமிய சமுதாயப் பெரியோர்களுடன் கலந்துரையாடிய பிறகு அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற முதல்வர் பழனிசாமி.படங்கள்: எல்.பாலச்சந்தர்

ராமநாதபுரம்

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு இந்த மாத இறுதியில் பூமி பூஜை நடத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக முதல்வர் பழனிசாமி மதுரையில் இருந்து மாவட்ட எல்லையான பார்த்திபனூருக்கு நேற்று காலை வந்தார்.

பார்த்திபனூரில் கால்நடை வளர்ப்பவர்களிடமும், பரமக்குடியில் சிறு வணிகர்கள், நெசவாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரிடமும், ராமநாதபுரத்தில் சமுதாய தலைவர்கள், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுடனும் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிகளில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட பகுதியாக இருப்பதால் மேட்டூர் அணையின் உபரி நீரைகால்வாய் வெட்டி இணைக்கும்வகையில் காவிரி-குண்டாறுஇணைப்புத் திட்டம் ரூ.14,000கோடியில் நிறைவேற்றப்படும். இதற்கு டெண்டர் விடப்பட்டுள் ளது. இத்திட்டத்துக்காக இந்த மாத இறுதியில் பூமி பூஜை நடைபெறும். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் அதிக பயன்பெறும்.

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும். ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை எங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகம் சட்டம்-ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என ஒரு பத்திரிகை கருத்துகணிப்பில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ்கிறது. இதர சில பிரிவினரையும் சேர்த்துதேவேந்திர குல வேளாளர் என்ற அறிவிப்பு குறித்து மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே அதிமுகஅரசு மீது குற்றம் சுமத்துகிறார். அவர் குறுக்கு வழியில்ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார். அதிமுகவை உடைப்பேன் என்கிறார். ஒரு அதிமுக தொண்டரைக்கூட ஸ்டாலினால் தொட்டுப் பார்க்க முடியாது. அதிமுக ஆட்சியைக் கவிழ்க்கலாம் எனநினைத்தார், அதுவும் பாதகமாகிவிட்டது.

கரோனா காலத்திலும் தமிழகம் ரூ.60,000 கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. நீர் மேலாண்மை, மின்சாரம், உணவுஉற்பத்தி உட்பட பல்வேறு துறைகளில் தமிழகம் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

தென் மாவட்டங்கள் பொருளாதாரத்தில் மேம்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சகாப்தம் படைப்போம். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சிகளில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.

பாதுகாப்பாக இருப்போம்

ராமநாதபுரத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் முதல்வர்பேசியதாவது: குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத் தில் அன்வர்ராஜா எம்.பி.யைநான்தான் பேசச் சொன்னேன். அதிமுக அரசு என்றும் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கும். இஸ்லாமியமக்களுக்கு அதிமுக அரசு முழு பாதுகாப்பு அளிக்கும்.

இஸ்லாமிய சகோதரர் ஒருவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கியுள்ளோம். ஹஜ் யாத்திரைக்குக் கூடுதல் மானியம் வழங்க அரசு பரிசீலிக்கும். மொழி, ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x