Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது கரூரில் முதல்வர் பழனிசாமி உறுதி

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்ற விழாவில், முதல்வர் பழனிசாமி ரூ.627 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.118.53 கோடியிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.35 கோடியில் 11,760 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.

தொடர்ந்து, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகள், சிறு, சிறு நடுத்தரத் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் ஆய்வு செய்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியது: கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போதும் கூட்டணியில் தொடர்கின்றன.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தமிழக அரசு ரத்து செய்ய உள்ளதாக சில எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இதுபோன்று அவர்கள் விஷமத்தனமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் இந்த அரசு ஆதரிக்காது. விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

நான் விவசாயி என்று ஸ்டாலின் எனக்கு சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகள் எங்கே பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளை வைத்து நாடகமாடுகின்றனர். தேர்தலை மனதில் வைத்து எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்கின்றன. வேளாண் திட்டங்களை எதிர்த்து ஏஜென்டுகள்தான் போராடுகின்றனர். அந்த ஏஜென்டுகளுக்கு எதிர்க்கட்சிகளும் துணை போகின்றன.

நகர்ப்புற, கிராமப்புற ஏழை மாணவர்கள் 41 சதவீதம் பேர் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கின்றனர். நீட் தேர்வுக்கு முன்பு நுழைவுத்தேர்வு இருந்தபோது மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 40 பேர் தான் படிக்க முடிந்தது. இவற்றை ஆராய்ந்துதான் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு வழங்கும் வகையில் 7.5% உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்மூலம் நிகழாண்டு 311 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துஉள்ளது. அடுத்தாண்டு 11 புதிய கல்லூரிகள் மூலம் 1,650 இடங்கள் கிடைக்கும்போது, அரசுப் பள்ளி மாணவர்கள் 440 பேர் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

விழாவில், அமைச்சர்கள் பி.தங்கமணி, சி.விஜயபாஸ்கர், ஆட்சியர் சு.மலர்விழி, எம்எல்ஏம.கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x