தஞ்சாவூர் மாவட்டம் உளூர் பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அறுவடைக்கு தயாரான நெற்கதிர்களை நேற்று ஆய்வு செய்கிறார் வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி. உடன், ஆட்சியர் கோவிந்தராவ் உள்ளிட்டோர்.
தஞ்சாவூர் மாவட்டம் உளூர் பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அறுவடைக்கு தயாரான நெற்கதிர்களை நேற்று ஆய்வு செய்கிறார் வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி. உடன், ஆட்சியர் கோவிந்தராவ் உள்ளிட்டோர்.

தமிழகம் முழுவதும் புயல், மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து 2 நாளில் அரசுக்கு அறிக்கை வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி தகவல்

Published on

தமிழகம் முழுவதும் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் விவரம் குறித்து 2 நாட்களில் அரசுக்கு அறிக்கையாக அளிக்கப்படும் என வேளாண்மை துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புரெவி புயல் மற்றும் தொடர் மழை காரணமாக பயிர்கள் பாதித்த பகுதிகளை வேளாண்மை துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் வேளாண்மை, வருவாய்த் துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் வ.தட்சிணாமூர்த்தி கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிர் 1,35,147 ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விவசாயிகள் 90 சதவீதம் பேர் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடர் மழையின் காரணமாக 11,730 ஹெக்டேரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுஉள்ளன. மழை பாதிப்புகள் தொடர்பாக வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறையினரால் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் புரெவி புயல்மற்றும் தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த விவரம் அறிக்கையாக அரசிடம் அளிக்கப்படும். அதன்பிறகு பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும். பெரும்பாலான விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருப்பதால், இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in