

புதுக்கோட்டை மாவட்டம் குருவி
னான்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிவேலு. 75 வயது முதியவரை கொலை செய்த வழக்கில் சம்பட்டிவிடுதி போலீஸார் இவரை கைது செய்தனர். இந்த வழக்கில் பழனிவேலுவின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் 2-வது முறையாக ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் முதல் ஜாமீன் மனு 10.11.2020-ல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 9 நாட்களுக்கு பிறகு 2-வது ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு கடந்த நவ.26-ல் வேறு நீதிபதி முன்பு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுஉள்ளது.
உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை சுற்றறிக்கை அடிப்படையில், முதல் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், அடுத்த ஜாமீன் மனுவை முதல் மனுவை தள்ளுபடி செய்த அதே நீதிபதி முன்புதான் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்.
இதற்கு மாறாக உயர் நீதிமன்றக் கிளை பதிவுத்துறை செயல்பட்டுள்ளது. வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடும் முன் தலைமை நீதிபதியிடமோ, துறை சார்ந்த நீதிபதியிடமோ அனுமதி பெறவில்லை. வழக்கு ஒதுக்கீடு தொடர்பான தலைமை நீதிபதியின் அதிகாரத்தில் பதிவுத்துறை தலையிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது விதிமீறல் மட்டும் அல்ல, தீவிரமான நடத்தை மீறலும் கூட. இதுபோன்ற முறைகேடு நீண்ட நாளாக நடப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
எனவே, தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு தெரிவிக்காமல் வேறு நீதிபதிக்கு ஜாமீன் மனுவை விசாரணைக்கு அனுப்பியது தொடர்பாக ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டு, முறைகேட்டில் தொடர்புடைய உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிடப்படுகிறது. ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.