அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீதானவிசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு மீதான நீதிபதி கலையரசன் விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பா மீதான நீதிபதி கலையரசன் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி குமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த மணிதனிகை குமார், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி விசாரித்தனர். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்குப் பணம் வாங்கப்பட்டதாகப் புகார் வந்ததால், விசாரணைக் குழுஅமைக்கப்பட்டுள்ளது என்றார்.
அப்போது நீதிபதிகள், இதுபோல புகார் கூறப்பட்ட அனைத்து துணைவேந்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், அண்ணா பல்கலைக்கழக விதிப்படியே விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
பின்னர், புகார் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தாமலேயே விசாரணைக் குழு அமைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், முதற்கட்ட விசாரணை நடத்த அரசுக்கு அதிகாரம் இல்லை. இதனால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள், தமிழகத்தில் துணைவேந்தர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படவில்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பிலும் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. அது குறித்து விசாரிக்கவில்லை.
புகார் கடிதம் வந்ததும், அதில் முகாந்திரம் உள்ளதா?, இல்லையா? எனப் பார்க்காமல் விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன்? சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? இது போன்ற ஊழல் புகார் கூறப்பட்ட அனைத்து துணைவேந்தர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன? எனக் கேள்வி எழுப்பினர்.
பின்னர், சூரப்பா மீது முதல்வர் தனிப் பிரிவுக்கு அனுப்பிய புகார், அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை டிச.2-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
