Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

100 நாள் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன் திருக்குவளையில் உதயநிதி கைதாகி விடுதலை

திருக்குவளையில் நேற்று கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர்.

நாகப்பட்டினம்

திருக்குவளையில் கருணாநிதியின் இல்லத்தில் இருந்து நேற்று தனது 100 நாள் பிரச்சாரத்தை தொடங்க இருந்த உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 100 நாள் பிரச்சாரம் மேற்கொள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருந்தார். அதன்படி, நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நேற்று அவர் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டது.

இதையொட்டி, பிரச்சாரம் தொடங்கவுள்ள இடத்தில் தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ் குமார் மீனா தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பிரச்சாரத்தின்போது 3 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கருணாநிதி பிறந்த இல்லத்திலிருந்து வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தலைமைக் கழகம் முடிவு செய்யும் தொகுதியில் நான் போட்டியிடுவேன். மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலை வைத்துக்கொண்டு பல கோடி ரூபாய் பேரம் பேசிய ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. கரோனாவை விரட்டி அடிக்க வேண்டிய அதிமுக அரசு, அதையே காரணம் காட்டி ஊழல் செய்தது. அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால ஊழல், கொலை, கொள்ளை ஆகியவற்றை முதன்மையாக வைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் பிரச்சாரம் இருக்கும் என்றார்.

இதைத்தொடர்ந்து, மேடையில் ஏறிய உதயநிதி ஸ்டாலினை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுத்து அவரை கைது செய்வதாகக் கூறினர். இதனால் போலீஸாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் இருந்தவர்களை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x