

மதுரை: தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பான அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், அதை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிப்போம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் மதுரையைச் சேர்ந்த பொன் குமார் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி காணொலி மூலம் ஆஜராகி கூறியதாவது:
தமிழகத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படாது. 6-ம் வகுப்பிலிருந்து, ஒரு வகுப்பில் பயிலும் மொத்த மாணவர்களில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய அரசு புதிய விதியை உருவாக்கியுள்ளது.
அவ்வாறு மாணவர்கள் விருப்பம் தெரிவித்தாலும் தமிழ் கற்பிக்க தற்காலிக ஆசிரியர்களே நியமனம் செய்யப்படுவர், வாரத்துக்கு 2 அல்லது 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்திவிட வேண்டும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது தெளிவாகிறது. எனவே, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது தொடர்பாக அவசர வழக்காக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.