

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தொடர்ந்து படிக்கும் மாணவ, மாணவியரே மருத்துவக் கல்விக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் பலன் பெற முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டிலேயே முதன்முறையாக மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் எம்.பி.பி.எஸ்., 92 மாணவர்கள் பி.டி.எஸ்., என மொத்தம் 405 பேர் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தொடர்ந்து படிக்கும் மாணவ, மாணவியரே இந்த இட ஒதுக்கீட்டில் பலன் பெற முடியும். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 55 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவரும்.
ஹோமியோ, சித்தா, யுனானி போன்ற மருத்துவப் படிப்பில் எத்தனை அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி, ஜேஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தினர் 23-ம் தேதி வரவுள்ளனர். இதுதொடர்பாக ஆய்வு செய்து, பயிற்சியை அவர்கள் இலவசமாக வழங்குவதாக இருந்தால் மட்டும், அந்த நிறுவனம் மூலமாக பயிற்சி அளிக்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான பட்டய கணக்காளர் பயிற்சிக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் விண்ணப்பம் பெற்று, ஜனவரியில் பயிற்சி தொடங்கப்படும். இந்த ஆண்டு பிளஸ் 1 படிக்கும் போதே இப்பயிற்சி அளிக்கப்படும்.
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து டிசம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும். தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிதி நிலைக்கு ஏற்ப நிரப்பி வருகிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும். நான் தனியாக முடிவு செய்ய முடியாது என்றார்.