பழநி, திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா பொதுமக்களுக்கு அனுமதி இல்லை சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை யு-டியூப்பில் ஒளிபரப்ப முடிவு

பழநி, திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா பொதுமக்களுக்கு அனுமதி இல்லை சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை யு-டியூப்பில் ஒளிபரப்ப முடிவு
Updated on
1 min read

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை டி.வி., யு-டியூப் மூலம் ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை (நவ.15) முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து சுவாமியை தரிசனம் செய்வர். இதில் ஆறாம் நாள் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பர்.

இத்திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக கந்தசஷ்டி திருவிழாவில் மண்டகப்படிதாரர், பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, உள்ளூர் தொலைக்காட்சி, யு-டியூப் மூலம் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது.

சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் நாட்களில் பக்தர்கள் மலைக்கோயில் செல்லவும், திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில் செல்லவும் அனுமதியில்லை.

திருச்செந்தூரில்...

கரோனா பரவலால் பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். கோயிலில் தங்கி விரதமிருக்க அனுமதியில்லை. வழக்கமாக சஷ்டி விழாவின் போது மாலையில் நடைபெறும் தங்கத்தேர் உலா இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள், கடல் மற்றும் நாழிக்கிணற்றில் நீராடவும், குழந்தைகளுக்கு மொட்டை போடுதல் மற்றும் காது குத்தவும் அனுமதியில்லை.

வரும் 20-ம் தேதி கோயில் பிரகாரத்தில் வைத்து சூரசம்ஹாரமும், 21-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறும். இதற்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இவை கோயில் யு-டியூப் சேனல் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

எனினும், வரும் 20 மற்றும் 21-ம் தேதிகள் தவிர மற்ற நாட்களில் மூலவரை தரிசனம் செய்ய ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in