

தீபாவளி பண்டிகை மற்றும் வரத்து குறைவால் மதுரையில் மல்லிகை கிலோ ரூ.1,400-க்கு விற்பனையானது.
தமிழகம் முழுவதும் பரவலாக மல்லிகைப் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் குண்டு, குண்டாகப் பெருத்து நல்ல மணம் வீசும் மதுரை மல்லிகைக்கு வரவேற்பு உண்டு. கரோனா ஊரடங்கால் வாங்க ஆளில்லாமல் மல்லிகைப் பூ விலை குறைந்தது. கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு ஆயுத பூஜையின்போது மதுரை மல்லிகை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையாது.
இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மல்லிகை உட்பட பல்வேறு பூக்கள் விலை உயர ஆரம்பித்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.600-க்கு விற்ற மல்லிகை நேற்று முன்தினம் கிலோ ரூ.1,200-க்கும், நேற்று கிலோ ரூ.1,400-க்கும் விற் பனையானது.
இதுகுறித்து மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரி ராமச்சந்திரன் கூறியதாவது: ஜனவரி இறுதி முதல் ஏப்ரல் வரை மல்லிகைப் பூ சீசன் இருக்கும். இந்த காலத்தில் பூக்கள் வரத்தும், அதன் விலையும் அதிகமாக இருக்கும். அதன் பிறகு சீசன் இல்லாவிட்டாலும் மல்லிகைப் பூ சந்தைக்கு வந்து கொண்டுதான் இருக்கும்.
தற்போது குளிர் காலம் என்பதால் பூக்கள் உற்பத்தி மிகக் குறைவாக இருக்கும். அவ்வாறு இருந்தும் மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு தினமும் 6 முதல் 7 டன் மல்லிகைப் பூ வந்து கொண்டிருந்தது. ஆனால் நேற்று 4 டன் மட்டுமே வந்தது. இந்த விலை உயர்வு ஞாயிற்றுக்கிழமை வரை இருக்கும் என்றார்.