

சென்னை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் 11 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் மாதம் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பல ஆண்டுகளாக வரி செலுத்தாமலும், வரி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நிறுவனங்களிலும், வரி மோசடி குறித்து புகார்கள் வந்த நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் மட்டும் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேப்போல நாமக்கல்லில் அரசு கட்டுமான பணி ஒப்பந்ததாரர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை செய்தனர். சென்னை, கோவை, ஈரோடு, சேலம் பகுதிகளில் மட்டும் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், சென்னையில் பல்லாவரம், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஓட்டல்கள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்றது.
இதேபோன்று, மதுரை கோச்சடையில் செயல்படும் பிரபல நிறுவனத்துத்துக்குச் சொந்தமான சொகுசு ஓட்டலில் சென்னை, மதுரையைச் சேர்ந்த வருமான வரித் துறைஅதிகாரிகள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை7 மணிக்கு சோதனையைத் தொடங்கினர்.
அங்கு பணியில் இருந்த மேலாளர், ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். ஓட்டல் அலுவலக அறைகளில் சோதனை மேற்கொண்டபோது அங்கிருந்த முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். மாலை 6 மணி வரை இந்த சோதனை நீடித்தது. மதுரையில் உள்ள ஓட்டல் தவிர, தமிழகத்தின் பிற நகரங்களில் செயல்படும் இதே நிறுவனத்தின் ஓட்டல்களிலும் வருமான வரித்துறை குழுவினர் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனைகளின்போது, கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இதேபோன்ற திடீர் சோதனைகள் நடத்தப்படும். வரி ஏய்ப்பு செய்திருப்பதாக உறுதியாக தெரிந்த நிறுவனங்களில் மட்டுமே சோதனைகள் நடத்தப்படுகின்றன. அண்மையில் கல்வி நிறுவனங்களில் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.