

ஓய்வுபெற்று 2 ஆண்டுகளாகியும் இதுவரை பணப் பலன்கள் கிடைக்காமல் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தவிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
தமிழக அரசின் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் குடிநீர் வடிகால் வாரியம் இயங்கி வருகிறது. இத்துறையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், குடிநீர் திட்டப் பணிகளை செயல்படுத்துதல், மக்களுக்கு குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடைத் திட்டம் உட்பட பல்வேறு திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இத்துறையில், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு முன்பு ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கு பணப் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பிறகு 150 அதிகாரிகள் உட்பட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் இதுவரை ஓய்வுபெற்றுள்ளனர். அவர்களுக்கு 18 மாத ஊதிய பணிக் கொடை, 11 மாத விடுப்பு ஊதியம், ஓய்வூதியப் பங்குத் தொகை என எந்தப் பணப் பலன்களும் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துஉள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட இணைச் செயலர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் மட்டுமின்றி போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளிலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்குப் பணப் பலன்கள் வழங்கப்படாமல் உள்ளன. குடிநீர் வடிகால் வாரியத்தில் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு சுமார் ரூ.60 லட்சம், ஊழியர்களுக்கு சுமார் ரூ.20 லட்சம் பணப் பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு பணப் பலன் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.