

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஆர்.சேதுராமன் தலைமை வகித்தார். துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்ரமணியம், டீன் (திட்டம் மற்றும் வளர்ச்சி) சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் 81 பிஎச்.டி. பட்டங்களும், 12 பேருக்கு சிறப்பு விருதுகளும் நேரிடையாக வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 4,800 இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இன்போசிஸ் இணை நிறுவனரும், அக்ஸிலர் நிறுவனத்தின் தலைவருமான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் பட்டமளிப்பு விழாவின்போது இணையதளம் வாயிலாக ஆற்றிய உரை:
வாழ்நாள் முழுவதும் கற்றல், தரமான குறிக்கோள், தனக்குத்தானே உண்மையாக இருத்தல் மற்றும் துணிச்சல் ஆகிய அம்சங்கள் மாணவர்களின் விருப்பப் பட்டியலில் இருக்க வேண்டும்.
4-வது தொழில்புரட்சி என்பது செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல், ஐஓடி, ஏஆர், விஆர், கிளவுட் கம்ப்யூட்டிங், திறன்பேசி, 3டி பிரிண்டிங், மரபியல், பயோ மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆகியவை இணைந்த பல்துறைதொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வாய்ப்புகளை கொண்டதாக இருக்கும். எனவே இதற்கென புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும். இதற்கென புதிய வணிக மாதிரிகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
பி.டெக். படிப்பில் சிறந்த மாணவருக்கான சிறப்பு பரிசு, தற்போது தென்கொரியாவில் சன்க்யுன்க்வான் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் சுருதி கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. ஆன்லைன் மூலம் இந்த விருதை பெற்றுக்கொண்ட சுருதி கண்ணப்பன் தென்கொாரியாவிலிருந்து ஏற்புரையாற்றினார். சிறந்த பிஎச்.டி. ஆய்வறிக்கைக்கான விருது பொறியியல் பிரிவில் டாக்டர் கிஷான்குமாருக்கும், அறிவியல் பிரிவில் டாக்டர் எம்.வீணாவுக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற பட்டமளிப்பு விழா ஊர்வலத்தில் நாதஸ்வர இசை முழங்க, அனைவரும் கைத்தறி ஆடை அணிந்து கலந்துகொண்டனர்.