Published : 09 Oct 2024 08:49 AM
Last Updated : 09 Oct 2024 08:49 AM
சென்னை: திமுக சட்டத்துறை நிர்வாகிகள் மாற்றப்பட்டதுடன், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே, திமுகஅடிப்படை பணிகளை தொடங்கிவிட்டது. முன்னதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரைக் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு பல்வேறு அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு, தேர்தலுக்கு தயாராகும்படி அறிவுறுத்தி வருகிறது. இதுதவிர, நிர்வாகிகள் மீதான புகார்களை விசாரித்து, தலைமைக்கு பரிந்துரைகள் வழங்கி வருகிறது. மேலும், திமுகவில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் செய்வது குறித்தும் இக்குழுவினர் பரிந்துரைக்கின்றனர்.
அந்த வகையில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் பரிந்துரைப்படி, திமுக சார்பில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை பார்வையிட தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்னையில் கொளத்தூர்- சட்டத்துறை தலைவர் ஆர்.விடுதலை, அண்ணாநகர்- தமிழன் பிரசன்னா, தி.நகர்- பத்மபிரியா, மயிலாப்பூர்- கோவி.லெனின், சைதாப்பேட்டை- பருதிஇளம் சுருதி, ஆவடி- நிவேதாஜெசிகா, ஆலந்தூர்- மாணவரணிதலைவர் இரா.ராஜீவ்காந்தி, தாம்பரம்- கே.எஸ்.ரவிச்சந்திரன், உத்திரமேரூர்- சூர்யா வெற்றிகொண்டான் என 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியின் மாவட்டசெயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி, அவர்களுக்கு உதவும் வகையில் கிளை, பூத் வாரியாக தொடர்பு கொண்டு பூத் ஏஜென்ட்கள் மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்த தலைமையின் அறிவுறுத்தலை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
அறிக்கை சமர்பிப்பு: மேலும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் பெயர்கள் நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிட்டதேர்தல் பணிகளை நேரடியாக ஆய்வு செய்து அதன் விவரங்களை வாரம் ஒருமுறை தலைமைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சட்டத் துறை நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக சட்டவிதிகளின்படி ஏற்கெனவே நியமிக்கப்பட்ட திமுக சட்டத்துறை நிர்வாகிகள் பட்டியல் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகராக பி.வில்சன்எம்.பி., சட்டத்துறை தலைவராக ஆர்.விடுதலை, சட்டத்துறை செயலாளராக என்.ஆர்.இளங்கோஎம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இணை செயலாளர்களாக இ.பரந்தாமன் எம்எல்ஏ, கே.எஸ்.ரவிச்சந்திரன், என்.மணிராஜ், கரூர் கே.எம்.தண்டபாணி, கோவை சு.ராதா கிருஷ்ணன், ஈரோடு பி.ஆர்.அருள்மொழி, கோவை இரா.தாமரைச்செல்வன், தருமபுரி ஜெ.பச்சையப்பன், சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் துணை செயலாளர்கள், தலைமை கழக வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT