Published : 28 Nov 2023 09:12 AM
Last Updated : 28 Nov 2023 09:12 AM

“நான் துணை முதல்வராவது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் தாயார் துர்கா ஸ்டாலின்.

சென்னை: தான் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதை முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி நேற்று காலை கோபாலபுரம் சென்று மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின், ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்குச் சென்று தந்தையும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தாய் துர்கா ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்ற அமைச்சர் உதயநிதி, அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதுடன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பெரியார் திடலுக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் அங்கு நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கட்சியின் 500 மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பு பொற்கிழிகளையும், 500 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்கள் துணை முதல்வர் குறித்து உதயநிதியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நான் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதை முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x