Published : 23 Nov 2023 05:44 AM
Last Updated : 23 Nov 2023 05:44 AM

சிப்காட் தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்வது அவசியம் இல்லை: போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

திருவண்ணாமலை: வேளாண் நிலங்களை கையகப்படுத்தி, செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்வது அவசியம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையின் 3-வது அலகு விரிவாக்கத்துக்கு வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும், விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி, பாமக சார்பில் செய்யாறு அடுத்தமேல்மா கூட்டுச்சாலையில் நேற்றுகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்த பாமக தலைவர்அன்புமணி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்காக வேளாண் நிலங்களைகையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் 150 நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பங்கேற்ற 20 விவசாயிகளை கைது செய்த தமிழக அரசு, 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தது.

பாமக உள்ளிட்ட கட்சிகளின் கண்டனம் காரணமாக 6 பேர் மீதானகுண்டர் சட்டத்தை ரத்து செய்தாலும், அருள் என்ற விவசாயி மீதானவழக்கை ரத்து செய்யவில்லை. அவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக அரசின்இந்த நடவடிக்கையை பாமக கடுமையாக கண்டிக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள், அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அங்கே சிப்காட் தொடங்கினால் யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், முப்போகம் விளையும் 2,700 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்துதான் சிப்காட் தொடங்குவோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கோவை அடுத்த அன்னூரில் விவசாய நிலத்தைக் கைப்பற்றி சிப்காட் தொடங்க கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், திட்டம் கைவிடப்பட்டது. அன்னூருக்கு ஒரு நியாயம், செய்யாறுக்கு ஒரு நியாயமா? வேளாண் நிலங்களை கையகப்படுத்தி, சிப்காட்தொழிற்பேட்டையை தொடங்கத்தேவையில்லை.

ஆளுநர், முதல்வர் மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு ஒன்றாக செயல்பட்டால்தான், தமிழகத்துக்கு முன்னேற்றம் கிடைக்கும். இல்லையேல் மாநிலத்துக்குத்தான் பாதிப்பு ஏற்படும். ஆளுநர் ஈகோ பார்க்காமல், சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிஅனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்தங்கிய சமுதாயங்களை வளர்ச்சி பெறச் செய்து, சமூகநீதியை நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x