Published : 08 Oct 2023 06:55 AM
Last Updated : 08 Oct 2023 06:55 AM

மருந்து கடை ஊழியர் கணக்கில் ரூ.753 கோடி வரவு: சேவை குளறுபடிகள் பின்னணி குறித்து வங்கியாளர்கள் விளக்கம்

தஞ்சாவூரை சேர்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக வந்த குறுஞ்செய்தி

சென்னை: மருந்துக் கடை ஊழியர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு என்ன காரணம் என்பது குறித்து வங்கியாளர்கள் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் முகமது இத்ரீஸ். இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருந்துகடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று தனது கோட்டாக்மஹிந்திரா வங்கி கணக்கில் இருந்து,யுபிஐ மூலம் தனது நண்பருக்கு ரூ.2 ஆயிரம், மற்றொருவருக்கு ரூ.100 அனுப்பி உள்ளார்.

பணம் அனுப்பிய உடன் முகமது இத்ரீஸ் செல்போன் எண்ணுக்கு ரூ.753 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரம் மீதம் இருப்பதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த குறுந்தகவலை ஆய்வு செய்தபோது, அந்த தொகை வங்கி கணக்கு இருப்பில் இருப்பது உறுதியானது. இதுதொடர்பாக, வங்கி மேலாளரிடம் அவர் புகார் அளித்தார். இதையடுத்து, உடனடியாக அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிகிறது.

ஏற்கெனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரின் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிகணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி வரவுவைக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. அதேபோல், நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே வீரப்புடையான்பட்டி மேலத்தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கணேசனின் வங்கிகணக்கில் ரூ.756 கோடி வரவு வைக்கப்பட்டது.

தமிழகத்தில் அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருவதால், இதன் பின்னணி என்ன என்பது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது: வங்கி வாடிக்கையாளர் கணக்கில் பெரிய தொகை திடீரென டெபாசிட் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம், பாதுகாப்பு இல்லாத தகவல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சரியான மேற்பார்வை செய்யாததுதான். ஏனெனில், ஊழியர் வாடிக்கையாளரின் கணக்கில் பணத்தை செலுத்தினால் அதை உயரதிகாரி சரியாக மேற்பார்வை செய்ய வேண்டும்.

அவர் மெத்தனப் போக்குடன் செயல்பட்டால் இத்தகைய தவறுகள் நிகழும். அத்துடன், ஊழியர் பற்றாக்குறையால், வேலைப் பளு அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவும் இத்தகைய தவறுகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, தொகையை குறிப்பிடும்போது தவறுதலாக காசோலை எண்ணையும் சேர்த்து குறிப்பிடுகின்றனர்.

தனியார் வங்கிகளில்தான் இதுவரை இத்தகைய தவறுகள் நிகழ்ந்துள்ளன. இதனால், தனியார் வங்கிகள் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழக்கத் தொடங்கி உள்ளனர். எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், வங்கிகளில் போதிய அளவு ஊழியர்களை நியமிக்க வேண்டும். மேற்பார்வையை வலுப்படுத்துவதோடு, பாதுகாப்பான தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழக பிரிவு உதவித்தலைவர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது: மத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, ஒரு வாடிக்கையாளர் தனது கணக்கில் இருந்து வேறொரு கணக்குக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால், அதுகுறித்த விவரத்தை வாடிக்கையாளர் தனது வங்கியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அதே சமயம், வங்கித் தரப்பில் இருந்து இவ்வளவு பெரிய தொகை ஒரு வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைப்பதை கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை.

எனவே, இத்தகைய தவறுகள் நடந்தால் ரிசர்வ் வங்கி சம்மந்தப்பட்ட வங்கியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், இவ்வாறு தவறு நிகழும் போது சம்மந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு எதிர்காலத்தில் வருமானவரி துறை அல்லது வேறு ஏதாவது துறைகள் மூலமாகபிரச்சினை வராமல் தடுக்க சம்மந்தப்பட்ட வங்கியில் இருந்து தவறுக்கான காரணத்தை விளக்கி சான்றிதழ் தர வேண்டும். அதேபோல், வங்கிகளின் இணையதள தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக கையாளும் வகையில் வலுப்படுத்த வேண்டும். மேலும், போதிய அளவுக்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x