Published : 12 Nov 2021 03:15 AM
Last Updated : 12 Nov 2021 03:15 AM

புறக்கணிக்கப்பட்டவனின் குரல்! :

‘காவியத் தலைவன்’ படத்துக்குப் பிறகு வசந்தபாலன் எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘ஜெயில்’. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பு, இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை, திரையரங்குகளில் வெளியிடுகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இதற்கிடையில் இந்தப் படத்துக்காக தற்போது வெளியாகியிருக்கும் ‘நகரோடி’ என்கிற பாடல், இசை ரசிகர்களாலும் நெட்டிசன்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்பாடல் பிறந்த கதை பற்றியும் ‘ஜெயில்’ படம் குறித்தும் இயக்குநர் வசந்தபாலனிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...

‘வெயில்’ வெளிவந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தப் படத்தில்தான் ஜி.வி.பிரகாஷை அறிமுகம் செய்தீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

'ஜென்டில்மேன்' படத்தில் அவர் சிறுவனாக ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடியபோது உதவி இயக்குநராக நான் அருகில் இருந்திருக்கிறேன். ‘வெயில்’ படத்தில் பணிபுரிந்தபோது அவருக்கு 17 வயது. ‘வெயில்’ பல அடுக்குகளைக் கொண்டப் படம். அதற்கு இளையராஜா போன்ற ஒரு மேதையால்தான் இசையமைக்கமுடியும்என்று எண்ணியிருந்தேன். ஆனால், அவ்வளவு சிறிய வயதில் ஜி.வி.பிரகாஷிடம் இருந்த உற்சாகமும் அவருடைய வார்த்தைகளில் இருந்த தன்னம்பிக்கையும் இவரால் இதைப் பண்ண முடியும் என்று என்னை நம்ப வைத்தன. அதை அவர் காப்பாற்றவும் செய்தார். ‘இசை அசுரன்’ என்று ரசிகர்கள் செல்லமாகப் பாராட்டுகிற அளவுக்கு, இந்த 15 ஆண்டுகளில் ஒரு முன்னணி இசையமைப்பாளராக, கதாநாயக நடிகராக அவருடைய வளர்ச்சியைப் பார்த்து எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வெயில் படத்தில் இயக்குநராக நான், இசையமைப் பாளராக ஜி.பி.பிரகாஷ், பாடலாசிரியராக நா.முத்துக்குமார் உட்படப் படத்தில் பங்களித்த பல கலைஞர்களும் முழுமையாக வெளிப்பட்டு நின்றோம். இன்றைக்கும் ‘வெயில்’ என் மனதுக்கு நெருக்கமான படம்.

‘வெயிலோடு விளையாடி’ பாடலுக்காக முத்துகுமாருக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்களும் விமர்சகர்களும் அப்போது ஆதங்கப்பட்டார்கள் இல்லையா?

தேசிய விருது கிடைத்திருக்க வேண்டிய பாடல்தான். என்றாலும் அவர் குறைந்துபோய்விடவில்லை. இன்னும் வீரியமாக வளர்ந்தார். ‘வெயிலோடு’ பாடலுக்கு முதல் பிலிம்ஃபேர் விருது முத்துக்குமாருக்கு கிடைத்தது.

முத்துகுமாரின் கவிதை ஒன்றை தற்போது இயக்கும் படத்துக்குப் பாடலாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது பற்றிக் கூறுங்கள்...

முத்துக்குமாரின் மறைவை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களில் நானும் ஒருவன். ‘ஜெயில்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘அநீதி’ என்கிற படத்தை இயக்கி வருகிறேன். அதில் முத்துக்குமாரின் கவிதை ஒன்றை எடுத்து, அதைத் திரைப்பாடலாக ஆக்கியிருக் கிறோம். இதற்காக முகநூலில் போட்டி ஒன்றை அறிவித்தோம். சுமார் 450 பேர் கலந்துகொண்டார்கள். அதிலிருந்து 2 கவிஞர்களைத் தேர்ந்தெடுத்தோம். முத்துக்குமார் இன்னும் இங்கிருந்து போய்விடவில்லை. ‘அநீதி’ படத்தில் அவருடைய கவிதையிலிருந்து பிறந்த பாடல் இடம்பெறுகிறது.

‘ஜெயில்’ என்கிற தலைப்பை நீங்கள் தேர்வு செய்ததுமே நிச்சயமாக இது ஜெயிலில் நடக்கும் கதையாக இருக்காது எனத் தோன்றியது..

உண்மைதான். எப்போது நீங்கள் குரல் உயர்த்திப் பேசுகிறீர்களோ அப்போது உங்கள் முன்னால் ஒரு ஜெயில் வந்து நின்றுவிடும். ஜெயில் என்கிற தலைப்பு இந்தப் படத்தில் ஒரு படிமம்தான். மானுட வளர்ச்சியை, மானுட சமூகத்தின் நலனை எவையெல்லாம் நெறிகின்றனவோ அவையெல்லாம் ஜெயில்தான். ‘அங்காடித் தெரு’ படத்தில் கடைத் தொழிலாளர்களின் நிலையைச் சொல்லியிருந்தோம். சமீபத்தில் தமிழக அரசு, அமர்ந்து வேலை செய்ய கடை ஊழியர்கள் அனைவருக்கும் ஸ்டூல் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ‘ஸ்டூல்’ என்பது ஒரு படிமம்தான். ‘தொழிலாளர்களுக்கு மரியாதை கொடுங்கள்.. அவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்கள்.. மனிதர்களாக அவர்களை நடத்துங்கள்’ என்றுதான் ஸ்டூல் என்கிற சொல் நமக்குச் சொல்கிறது என்றேன். அப்படித்தான் ஜெயில் என்கிற சொல்லையும் பார்க்க வேண்டும். அதிகாரத்தின் பெயரால் சக மனிதர்களின் வேலையைப் பறிப்பது, அவர்களுடையப் பூர்விக வாழ்விடத்தைப் பறிப்பது என ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக எங்கெல்லாம் அநீதி நிகழ்கிறதோ அங்கெல்லாம் ஜெயில் முளைக்கிறது. அதைத்தான் ஜெயில் படம் பேசுகிறது.

ஜி.வி.பிரகாஷ் ஏற்றிருக்கும் கர்ணா என்கிற கதாபாத்திரம் எப்படிப்பட்டது?

பள்ளி இறுதி வகுப்பு முடித்த பையன், அல்லது கல்லூரி முதலாமாண்டு பயிலும் மாணவன் என, தமிழ் சினிமாவில் முதிர்ச்சியடையாத இளைஞனின் கதாபாத்திரங்களுக்கு ஓர் இடமிருக்கிறது. அது போன்ற ஒரு கதாபாத்திரத்தில்தான் ஜிவியை இதில் பயன்படுத்தியிருக்கிறேன். ஒடுக்கப்பட்ட, கைவிடப்பட்ட ஒரு சமூகத்தின் குரல்தான் கர்ணன். வாழ்நாள் முழுவதும் அங்கீகாரத்துக்காகவும் அதிகாரத்துக் காகவும் வலியை சுமந்து திரிபவன் என்பதுதான் நமது புராணத்திலும் இருக்கிறது. ஜி.விக்கு அதுவேதான் இதிலும்.

உங்களுடைய படங்களில் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகளை தொடர்ந்து ஈடுபடுத்த என்ன காரணம்?

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தாவரங்களின் உரையாடல்’ சிறுகதைத் தொகுப்பைப் படித்துவிட்டு, அவருடன் பணியாற்ற வேண்டும் என்று ‘ஆல்பம்’ படத்துக்கு விரும்பி அழைத்தேன். சுஜாதா, பாலகுமாரனின் கை ஓங்கியிருந்த நாட்கள் அவை. ‘ஆல்பம்’ படத்துக்குப் பிறகுதான் அவர் ‘பாபா’ படத்துக்குப் பணியாற்றச் சென்றார். அதேபோல் ஜெயமோகனுக்கு முக்கியமான படமும் ‘அங்காடித் தெரு’ தான். பிறகு சு.வெங்கடேசன். இப்படித் தமிழில் முக்கியமான நவீன எழுத்தாளர்கள் பலருடன் நான் ஏதோவொருவிதத்தில் வேலை செய்திருக்கிறேன். சமகாலத்தின் வாழ்க்கை, நவீனச் சிந்தனை, நமது வரலாறு போன்றவை படங்களில் இடம்பெற வேண்டும் என்பதுதான் நோக்கம். ‘ஆல்பம்’ தொடங்கி எஸ்.ராமகிருஷ்ணனுடன் எனது பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அப்படித்தான் புதிதாக வளர்ந்து நிற்கும் புறநகர் சென்னை குறித்த ஒரு கதையை என்னிடம் சொன்னார். அதற்காக லொக்கேஷன் பார்க்கச் சென்றபோது ஒரு வாழிடப் பகுதியைப் பார்த்ததும் கதையை மாற்றி அதற்காக வேலை செய்யவேண்டிய கட்டாயத்தை எங்கள் மனசாட்சி உருவாக்கியது. தன்னை ‘வடசென்னைக்காரன்’ என்று துணிந்து பிரகடனப்படுத்தி எழுதிவரும் பாக்கியம் சங்கர் இந்தப் படத்தின் வசனங்களை எழுதி புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்திருக்கிறார்.

தற்போது வெளியாகியிருக்கும் ‘நகரோடி’ என்கிற பாடல் எப்போது உருவானது?

‘ஜெயில்’ படத்தை முடித்துவிட்டு ‘அநீதி’ படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். அப்போதுதான் கரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தேன்.திடீரென்று மூச்சுத் திணறல்.. செவிலியர்களிடமும் மருத்துவர்களிடம் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்று சொன்னேன். எனக்கு ஆக்ஸிஜன் வைத்தார்கள். அந்த நேரத்தில் அந்த வார்டு முழுவதும் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்கிற வார்த்தைகள் கேட்டுக்கொண்டேயிருப்பதுபோல் உணர்ந்தேன். அதேசமயம் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்கிற குரல் ஜார்ஜ் பிளாய்ட்டின் குரலாகக் கேட்கத் தொடங்கியது. அவருடைய இந்த மூன்று வார்த்தைகள் விடுதலையின் குரல், அதற்காக ஏங்கி நிற்கும் வலியின் குரல். சர்வநிச்சயமாக ஒரு நோயாளியின் குரல் அல்ல. அப்போது போனில் கூகுளில் துழாவிக்கொண்டிருந்தபோது ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்கிற தனியிசைப் பாடல் 2020-க்கான கிராமி விருது பெற்றிருப்பது என் கண்களில் பட்டது. ஜெயில் படமும் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்றுதானே குரல் எழுப்புகிறது என்கிற எண்ணம் வந்ததும் மருத்துவமனையிருந்தே பாடலுக்கான ‘டம்மி’ வரிகளை எழுதி ஜி.வி.பிரகாஷுக்கு வாட்ஸ் ஆப் வழியே அனுப்பினேன். அவரோ.. ‘இந்தச் சூழ்நிலையில் உங்கள் உடல்நிலையல்லாவா முக்கியம்’ என்று சொன்னதுடன் பாடலுக்கான இசையைக் கம்போஸ் செய்து பல மெட்டுகளை அடுத்தடுத்து அனுப்பினார். அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம். பாடலை யார் எழுதலாம் என்று யோசித்தபோது ‘தெருக்குரல்’ அறிவு சரியான தெரிவாக இருப்பார் என முடிவு செய்தோம். மெட்டைக் கேட்டு அறிவு எழுதி அனுப்பிய வரிகளைப் பார்த்ததும் அதில் அவர் பயன்படுத்தியிருந்த ‘நகரோடி’ என்கிற சொல் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. நாடோடி என்ற சொல் இருக்கிறது. ஆனால் ‘நகரோடி’ என்கிற சொல் முற்றிலும் புதியது. யார் இத்தனை அழகான நகரத்தை உருவாக்கினார்களோ.. அவர்களை இந்த நகரத்தின் புழக்கடைப் பகுதிக்கு அப்புறப்படுத்துவதை வலியுடன் உணர்த்தும் சொல்லாகவே அது இருந்தது. உலகம் முழுவதுமே இதுதான் நிலை. அதைத்தான் ‘நகரோடி’ பாடல் சொல்கிறது. இது இந்த படத்துக்கான குரல் மட்டுமே அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x