Last Updated : 11 Nov, 2021 03:07 AM

 

Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM

ஓரடி ஈரடி சீரடி! :

அகத்தில் உண்மையோடு வருபவர்களுக்கு எளிமையின் திருவுருவாய் ஷிர்டியில் தரிசனம் தரும் பாபாவை போற்றிப் பாடும் பாமாலைகள் ஷிர்டி பாபா மெலடி என்னும் யூடியூப் அலைவரிசையில் வியாழன்தோறும் பதிவேற்றப்பட்டு வருகின்றன. எந்தவிதமான வார்த்தை ஜாலங்களும் அலங்காரங்களும் இசை மேதைமையும் இல்லா விட்டாலும் இந்தப் பாமாலையில் இருக்கும் பாடல்கள் மனத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன. சித்தார்த் எழுதிய பாடல்களுக்கு அந்தக் கால பாணியில் பாட்டுக்கு மெட்டமைத்து, பாடியும் இருக்கிறார் இசையமைப்பாளர் சிம்மம் குமார்.

ஷிர்டியின் புகழ் பரப்பும் ஒரு பாடல், கண்கண்ட தெய்வமான பாபாவின் மகிமை ஷிர்டிக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு பக்தனின் மனத்திலும் எப்படி எதிரொலிக்கிறது என்பதை ஒரு பாடலில் மிகவும் நெகிழ்ச்சியோடு விளக்கியிருக்கின்ற னர். பொதுவாகவே இறைவனிடம் பக்தன் தன்னுடைய வேண்டுதல் களையும் பிரார்த்தனைகளையும் கைகூப்பி, கண்மூடித் தியானித்து உருக்கமான பக்தியை வெளிப்படுத்தி மன்றாடுவான். ஆனால் `கடவுளுக்கு தெரியாதா பக்தனின் தேவை?' என்னும் கேள்விக்குப் பதிலாக விரிகிறது, “நான் கேட்டு நீ கொடுத்தாய் பாபா.. நான் கேட்காத போதும் நீயே கொடுத்தாய்...” என்னும் பாடல்.

`உள்ளத்தில் ஒளி உண்டாக என்ன செய்ய வேண்டும்?', காடு, மலைகள், பாலை நிலங்கள் என எங்கெல்லாமோ அலைந்து திரிய வேண்டுமா.. தேவையில்லை, உண்மையைக் கண்டறிய எங்கும் அலைய வேண்டாம் என்று பக்தன் ஒருவனே, தன்னைப் போல் அலையும் பக்தனை ஆற்றுப்படுத்தி அவனைத் தேற்றும் பாணியில் அமைந்திருக்கிறது ஒரு பாடல்.

நீயே எந்தன் விந்தை

“ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி உன்னைக் காணாது ஒருநாளும் இல்லை ஓம் சாயி..” என்னும் பாடலின் சேர்ந்திசையில் வெளிப்படும் உருக்கம் அலாதியானது. “உன்னைத் தவிர யாருமில்லை பாபா..”, “எந்நாளும் நீயே எந்தன் சிந்தை பாபா இந்நாளும் இனியும் நீயே எந்தன் விந்தை பாபா” என்னும் பாடலில் என் சிந்தனையின் தொடக்கமும் நீதான், நாளையின் தொடர்ச்சியும் நீதான் என்னும் விளக்கத்தின் மூலம் முக்காலத்திலும் சஞ்சரிக்கும் பாபாவின் அருள் விருந்து பாடலின் பிரசாதமாகிறது.

திரை இசையமைப்பாளரான சிம்மம் குமார் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை படித்தவர். பாலமுரளி கிருஷ்ணா, அபயாம்பிகா பாலமுரளி கிருஷ்ணாவிடம் தொடர்ந்து இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். பழந்தமிழ்ப் பாடல்களில் சித்தரிக்கப் பட்டிருக்கும் முருகக் கடவுளின் அற்புதங்களை கட்டுரைகளாக எழுதிவருபவர். இதற்காகவே `கௌமாரநாதம்' என்னும் ஆன்மிக இதழையும் நடத்தி வருபவர்.

“ஷிர்டி பாபாவைப் போற்றும் பாடல்களை எழுதியிருக் கிறேன். படித்துவிட்டு உங்களின் கருத்து களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார் என்னுடைய நண்பர் சித்தார்த். அந்தப் பாடலின் வரிகள்தான் என்னைப் பாட்டாகவே பாடி அனுப்புவதற்குத் தூண்டின.

பாடல்களில் சாதாரண வார்த்தைகளைக் கொண்டே மனதைக் கரைக்கும் அம்சம் இருந்தது. ஹேமவதி, வர்ண ரூபிணி ராகம் போன்ற ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசை அமைத்திருக்கிறேன். ஒரு பாடலுக்கு ஒரு மெட்டைத் தாண்டி வேறு போடவில்லை. முதலில் போட்ட மெட்டே போதுமானதாக இருந்தது. வரிகள் என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தன. அதற்கு இணையாக மெட்டும் கேட்பவர்களை நெகிழ்ச்சி அடையும் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதை மட்டும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இசையமைத்தேன். முருகனின் அருளால் இசையமைப்பதற்கான வேலை வரும் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு ஷிர்டி பாபாவின் அருளால் இந்தப் பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புக் கதவு திறந்தது என்னைப் பொறுத்தவரையில் சிலிர்ப்பான அனுபவம்தான்.

இது தவிர, பாம்பன் சுவாமிகள் எழுதிய பாடல்களி லிருந்து தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். திருப்புகழ் போன்ற சந்தக் கவிக்கு மிஞ்சியது உலகத்தில் எதுவுமே கிடையாது. அந்தப் பாடல்களுக்கு பதச் சேதம் இல்லாமல் இசையமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கர்னாடக இசைக் கச்சேரிகளில் பாடப்படும் துக்கடாவுக்கு உரியதல்ல திருப்புகழ்; முழுக்க முழுக்க திருப்புகழ் பாடல்களைக் கொண்டே முழுக் கச்சேரி நடத்தலாம். அந்தளவுக்கு அதில் விஷய ஞானம் பொதிந்து கிடக்கிறது” என்கிறார்.

எங்கெங்கோ அலைந்தேன் பாடலைக் காண: https://bit.ly/3Gzk9Xc

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x