Published : 01 Nov 2023 05:54 AM
Last Updated : 01 Nov 2023 05:54 AM

ODI WC 2023 | நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

கோப்புப்படம்

புனே: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தென் ஆப்பிரிக்க அணி 6 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து அணி 6 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 389 ரன்கள் இலக்கை துரத்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது நியூஸிலாந்து அணி.

தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய இருஅணிகளுமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான களத்தில் உள்ளன. முதல் 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த நியூஸிலாந்து அணி அதன் பின்னர் வலுவான இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. இன்றைய ஆட்டத்திலும் அந்த அணி தோல்வியை சந்தித்தால் அரை இறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஏனெனில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் அரை இறுதி வாய்ப்பை பெறுவதற்கான அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு முன்னேறுவதை ஏறக்குறைய உறுதி செய்துவிடும்.

தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய இருஅணிகளுமே நடப்பு தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான குயிண்டன் டி காக் 3 சதங்களுடன் 431 ரன்கள் குவித்துள்ளார். மறுபுறம் நியூஸிலாந்து அணியில் 2 சதங்களுடன் 406 ரன்களை வேட்டையாடி உள்ளார் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா.

தென் ஆப்பிரிக்க அணியில் வலுவான ஹிட்டராக ஹெய்ன்ரிச் கிளாசன் திகழ்கிறார். 300 ரன்கள் குவித்துள்ள அவர், தனது அதிரடியால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கக்கூடிய வீரராக உருவெடுத்துள்ளார். அதே வேளையில் நியூஸிலாந்து அணியில் ஜிம்மி நீஷம் தனது அதிரடியால் பலம் சேர்ப்பவராக இருக்கிறார். அடுத்து டேவிட் மில்லரின் ஆக்ரோஷ ஆட்டம் தென் ஆப்பிரிக்க அணிக்கு முக்கிய காரணியாக விளங்குவது போன்று நியூஸிலாந்து அணிக்கு டேரில் மிட்செலின் பேட்டிங் அணுகுமுறை ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்ல உதவியாக இருக்கிறது.

தாக்குதல் ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணிக்கு பலம் சேர்ப்பவராக எய்டன் மார்க்ரம்திகழ்வது போன்று, நியூஸிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ்வலுவாக திகழ்கிறார். இவர்கள் இருவருமே சுழற்பந்து வீசுவது சாதகமானவிஷயமாக உள்ளது. இரு அணிகளின் பேட்டிங் வரிசை ஒற்றுமை இத்துடன் முடிவடையவில்லை. ஏனெனில் கேப்டன்களான தெம்பா பவுமா, டாம் லேதம் ஆகியோரது பேட்டிங் பாணியும் ஏறக்குறைய ஒற்றுமையாகவே இருக்கின்றன.

நியூஸிலாந்து அணியை விட தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமான விஷயங்களாக இருப்பது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மார்கோ யான்சனின் அபார செயல் திறனும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சியின் கலவையான செயல்பாடும்தான். தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் உடல் நலக்குறைவு காரணமாக களமிறங்காத காகிசோ ரபாடா முழு உடற்தகுதியை எட்டி உள்ளதை தொடர்ந்து இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும்.

இளம் வீரரான ஜெரால்டு கோட்ஸியும் சீரான செயல் திறனை வெளிப்படுத்தி வருகிறார். நியூஸிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு இவர்கள் அழுத்தம் கொடுக்கக்கூடும். நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சில் இன்றைய ஆட்டத்தில் மாற்றங்கள் இருக்கக்கூடும். லாக்கி பெர்குசன் காயம் அடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக டிம் சவுதி அல்லது மேட் ஹென்றி களமிறங்கக்கூடும். 14 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள மிட்செல் சாண்ட்னர் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x