Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

வடமாநிலங்களுக்கு அனுப்ப முடியாததால் - திண்டுக்கல்லில் சரியும் தேங்காய் விலை :

கரோனா பாதிப்பு காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் தேங்காய்களை மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தேங்காய் விலை சரிவடைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக் கானல் மலையடிவாரப் பகுதிகளான, ஆத்தூர், அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, வத்தலகுண்டு, பழநி, விருப்பாட்சி, நத்தம் ஆகிய பகுதிகளில் அதிக பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் தேங்காய்கள் மொத்தமாக மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வடமாநிலங்களில் விற்பனை அதிகம் இருந்ததால் சிறிய தேங்காய் ரூ.12க்கும், பெரிய தேங்காய் ரூ.15 வரையும் விற்பனையானது. கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாநில வாகனங்கள் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்றுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வடமாநிலங்களுக்கு லாரிகளை அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆத்தூரை சேர்ந்த தேங்காய் வியாபாரி சேசுராஜ் கூறுகையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மும்பை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் தேவைகள் குறைந்து விட்டது. மேலும் மகாராஷ்டிராவுக்குள் லாரிகள் செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் லாரிகளில் தேங்காய்கள் கொண்டு செல்வதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் தேங்காய்களை அனுப்புவதை குறைத்துக் கொண்டுள்ளோம்.

மேலும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் காரணமாகவும் கடந்த ஒருமாதமாக தேங்காய்களை வழக்கம்போல் லாரிகளில் அனுப்ப முடியவில்லை. இதனால் தேங்காய்களை தமிழகத்துக்குள்ளேயே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போதிய மழை காரணமாக விளைச்சல் நல்லமுறையில் இருந்ததால் தேங்காய் வரத்தும் அதிகரித்துள்ளது.

கொப்பரை தேங்காய்

வடமாநிலங்களில் விற்பனைக்கு அனுப்பும் தேங்காய்களையும் சேர்த்து தமிழகத்திலேயே விற்பனை செய்ய வேண்டியதுள்ளதால் தேங்காய்கள் விலை குறைந்துள்ளன. தமிழகத்தில் சென்னை, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகம் அனுப்பி வைக்கப்படுகிறது. காங்கேயத்தில் தேங்காய் வாங்குபவர்கள் அதை உடைத்து காய வைத்து கொப்பரை தேங்காயாக மாற்றி விற்பனை செய்கின்றனர். கொப்பரையை தேங்காய் எண்ணெய் தயாரிப்பவர்கள் வாங்கிச் செல்கின்றனர். வடமாநிலங்களுக்கு தேங்காய்களை அனுப்பியபோது இங்கு சிறிய தேங்காய் ரூ.12க்கும் பெரிய தேங்காய் ரூ.15 க்கும் விற்பனையானது.

தற்போது வடமாநிலங் களுக்கு அனுப்பமுடியாத நிலையில் தேங்காய் அதிகம் தேக்கமடைவதால் விலை குறைந்து சிறிய தேங்காய் ரூ.8க்கும் பெரிய தேங்காய் ரூ.10க்கும் விற்பனையாகிறது. அதிகளவில் தேங்காய்களை கொள்முதல் செய்யும் மகாராஷ்டிராவில் கரோனா தாக்கம் குறைய அதிக நாட்கள் ஆகும் என்கின்றனர். இதனால் தேங்காய்களின் விலை தற்போதைக்கு உயரவாய்ப்பில்லை. வடமாநிலங் களுக்கு தேங்காய்களை வழக்கமாக விற்பனைக்கு அனுப்பும் பணி மீண்டும் தொடங்கும்பட்சத்தில் தேங்காய் விலை உயர வாய்ப்புள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x