

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் போலீஸாரை கண்டித்து அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்புத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் மருது அழகுராஜ், திமுக சார்பில் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்து மே 2-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளன.
இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் வைகை பாரதி வாஹித் சகோதரர் அப்துல்பரித் தனது முகநூலில் மே 2-ம் தேதி மருது அழகுராஜ் வெற்றி பெறுவார் எனப் பதிவிட்டு இருந்தார்.
இதைப் பார்த்த திமுகவைச் சேர்ந்த ஹரிகர சுதனுக்கும், அப்துல் பரீத்துக்கும் இடையே சமூக வலைதளத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிகரசுதன் தனது ஆதரவாளர்களுடன் அப்துல்பரீத் வீட்டுக்குச் சென்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்துல்பரீத் திருப்பத்தூர் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். நடவடிக்கை இல்லாத நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு போலீஸாரை கண்டித்து அதிமுகவினர் மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த டிஎஸ்பி பொன்ரகு அவர்களை சமரசப்படுத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஹரிகரசுதன் உள்ளிட்ட 5 பேர் மீது திருப்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.