

மத்திய அரசு மூலம் தமிழகத்தில் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக நபார்டு வங்கியின் தமிழ்நாடு பிராந்திய தலைமைப் பொது மேலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி யில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் மதிப்புக் கூட்டிய பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
நபார்டு வங்கியின் பிராந்திய தலைமைப் பொது மேலாளர் செல்வராஜ் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் விவசாயிகளுக்காக அரசு சார்ந்த நிறுவனங்கள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் மூலம் நபார்டு வங்கி ரூ.27 ஆயிரம் கோடி அளவில் கடனுதவி வழங்கியுள்ளது. உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் குழுக்கள், பொறுப்புக் குழுக்கள், பழங்குடியினர் வாழ்வாதார முன்னேற்றம், நீர்பிடிப்புப் பகுதியில் செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் மற்றும் நுண்கடன் திட்டங்களை ஊக்குவிக்க ரூ. 31 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மூலமாக தமிழகத்தில் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. ஒரு குழுவுக்கு ரூ. 45 லட்சம் வரை இலவச நிதியுதவி கிடைக்கும், என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.