

கரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதால் அதைத் தடுக்க பொதுமக்கள் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சிங்கம்புணரி மருத்துவ அலுவலர் நபீசா பானு தலைமையில் அலுவலர்கள் பரணி, செந்தில்குமார், ஒருங்கிணைந்த வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, முகக்கவசம் அணியாத 14 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
முதுகுளத்தூரில்...
முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி கூறியதாவது: கரோனா பரவலைத் தடுக்க பேரூராட்சி சார்பில் வாகனங்கள் மூலமும் ஒலிபெருக்கியால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம் நடத்தினால் ரூ. 3000 அபராதமும் விதிக்கப்படும். முகக் கவசம் அணிந்து செல்லவும், கிருமிநாசினியை அடிக்கடி பயன்படுத்தி தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.