Published : 14 Feb 2021 03:19 AM
Last Updated : 14 Feb 2021 03:19 AM

சிவகங்கை மாவட்டத்தில் மாயமான 107 சமுதாய கிணறுகள் 10 ஆண்டுகளாக மீட்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

வகங்கை மாவட்டத்தில் மாயமான 107 சமுதாயக் கிணறுகளை 10 ஆண்டுகளாக மீட்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வேளாண்மை பொறியியல் சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்காக 1982-ல் சமுதாயக் கிணறுகள் தோண்டப்பட்டன. பம்புசெட் மோட்டார், இலவச மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டன. ஒரு கிணறு மூலம் 20 முதல் 30 ஏக்கர் வரை பாசன வசதி பெற்றன. அவற்றைப் பாதுகாக்க சிறு, குறு விவசாயிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை முன்னுரிமை அடிப்படையில் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தன.

பல ஆண்டுகளாக விவசாயக் குழுக் களுக்கான தேர்தலை நடத்தவில்லை. இதனால் சிலர் சமுதாயக் கிணறுகளை தங்கள் சொந்த கட்டுப்பாட்டில் வைத்து கொண்டனர். அவற்றை மீட்க வேண்டுமென, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய ஆட்சியர் ராஜாராமன் சமுதாயக் கிணறுகள் குறித்து ஆய்வு செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதில் சிவகங்கை மாவட்டத்தில் தோண்டப்பட்ட 354 கிணறுகளில் 247 மட்டுமே நல்ல நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் பல கிணறுகள் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும் மாயமான 107 கிணறுகளில் 67 கிணறுகள் துார்ந்துபோய் தண்ணீர் இல்லாமலும், 40 கிணறுகள் இருந்த சுவடே தெரியாமல் மறைந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாயமான கிணறுகளை மீட்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கிணறுகளை கண்டறியும் பணி கிடப்பில் போடப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை விவசாயிகள் பிரதிநிதி சந்திரன் கூறுகையில், ‘பயன்பாட்டில் உள்ள கிணறுகளையாவது தனியாரிடம் இருந்து மீட்க வேண்டும். கிணறுகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் புதிதாக விவசாயக் குழுக்களை அமைக்க வேண்டும்,’ என்று கூறினார்.

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சமுதாயக் கிணறுகளை காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டதால் சிலர் சொந்தமாக்கிக் கொண்டனர். இத னால் மற்றவர்கள் விவசாயத்தைக் கைவிட்டனர். பல இடங்களில் விவ சாயமே இல்லாததால் மீண்டும் கிணறுகளைச் சீரமைக்க முடியாதநிலை உள்ளது. மேலும் அதற்கான திட்டமும் தற்போது நடைமுறையில் இல்லை,’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x