

பிஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் சுமத் தாக்கூர் (35). கடந்த ஒன்றரை மாதமாக, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். கடந்த 13-ம் தேதி சம்பளத்தை பெற்றுக்கொண்டு ஊருக்கு செல்ல முடிவு செய்தார். இந்நிலையில், திருப்பூர்- மங்கலம் சாலை ஆலாங்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டியது. பணம் கொடுக்க மறுத்ததால், சுமத் தாக்கூரை அக்கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது.
படுகாயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுதொடர்பாக மத்திய போலீஸார் வழக்கு பதிந்து, கருவம்பாளையம், ஆலாங்காட்டை சேர்ந்த விஸ்வநாதன் (26), முகமது ஆரிஸ் (24) மற்றும், இரண்டு சிறுவர்கள் என 4 பேரை கைது செய்தனர்.