

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையம் மூலம் வெளியிடப்பட்ட புதிய உளுந்து ரகம் வம்பன் 11-ஐ திருப்பூர் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம், உடுமலை வட்டார பகுதிகளான பெரிசனம்பட்டி மற்றும் பெரியவாளவாடி கிராமங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த புதிய உளுந்து ரகம் தொடர்பாக, விதை அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் மு.கதிரவன் கூறியதாவது: உளுந்து செடியில் மஞ்சள் தேமல் நோயை எதிர்க்கும் திறன் உள்ளது. இறவையில் ஹெக்டேருக்கு 940 கிலோவும், மானாவாரியில் ஹெக்டேருக்கு 865 கிலோ சராசரி மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானது. உயிர் உரங்களான ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை தலா 200 கிராம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதன் மூலமாக, முழுமையான தழை மற்றும் மணிச்சத்து செடிகளுக்கு கிடைக்கும். பூக்கள் உதிராமல் அதிக மகசூல் பெற பயறு அதிசயம் என்ற வளர்ச்சி ஊக்கியை 2 கிலோ என்ற அளவில் 15 சதம் பூ பிடிக்கும் தருணத்தில் ஒருமுறை அடித்தல் அவசியமாகும். ஒரு கிலோ விதைக்கு ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் மற்றும் பேசிலஸ் சப்டிலிஸ் 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியா சார்ந்த நோய்கள் வருவது தடுக்கப்படும். இந்த தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு இந்த புதிய ரக உளுந்து விதை இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் உடுமலை வட்டார உதவி இயக்குநர் தேவி, வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் செ.திலகம், க.ஞா.கவிதா ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் முருகானந்தம், வைரமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.