Published : 16 Oct 2021 06:14 AM
Last Updated : 16 Oct 2021 06:14 AM

கோட்டூர் அருகே முழுமையடையாத கட்டுமானப் பணிகளால் - பயன்பாட்டுக்கு வராத நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் : தரத்தை ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

கோட்டூர் அருகே செருவாமணி கிராமத்தில், 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கட்டுமானப் பணிகள் முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டதால், புதிய நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் செருவாமணி கிராமத்தில், கடந்த 20 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு செருவாமணி, விழுப்பூர், மடப்புரம், சிவனாண்டார் கோவில், மேலமாறங்குடி, தாமரைப்பள்ளம், விசாலாட்சிபுரம் பகுதி விவசாயிகள் நெல்மூட்டைகளை விற்று வருகின்றனர்.

குறுவை, சம்பா, தாளடி பருவத்தில் ஏறத்தாழ 70 ஆயிரம் மூட்டைகள் வரை இந்த கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த தனியார் இடத்துக்கான வாடகையை விவசாயிகளே மூட்டை ஒன்றுக்கு ரூ.2 என வசூலித்து, கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செருவாமணியில் நெல்கொள்முதல் நிலையத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்ட கடந்த 2015-16-ம் நிதியாண்டில் தமிழக அரசு ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதில், கட்டுமானப் பணிகள் தொடங்கி, மேற்கூரை மற்றும் 2 அறைகள் கட்டப்பட்டன. ஆனால், பணி முழுமையாக முடிக்கப்படாத நிலையில், நிதி முழுவதும் செலவாகிவிட்டதாக கூறி, ஒப்பந்ததாரர் பணியை பாதியில் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக இந்த கட்டிடம் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் இருப்பதால் சேதமடைந்து வருகிறது. எனவே, இந்தக் கட்டிடத்தை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, இதில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து செருவாமணி விவசாயிகள் முருகானந்தம், பாலதண்டாயுதம் உள்ளிட்டோர் கூறியது: அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் முழுமையடையாத நிலையில், கட்டுமானமும் தரமற்றதாக உள்ளது. இதனால், எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்துவிழவும் வாய்ப்புள்ளது.

எனவே, அதிகாரிகள் இந்தக் கட்டிடத்தை ஆய்வு செய்து, கட்டிடம் தரமாக உள்ளதா என உறுதிசெய்ய வேண்டும். தரமாக இருப்பது உறுதியானால், தொடர்ந்து கட்டிடப் பணிகளை முழுமையாக மேற்கொண்டு, கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அ.கோ.ராஜராஜன் கூறியது:

நெல் கொள்முதல் நிலையத்துக்கான புதிய கட்டிடத்தின் நிலை குறித்து, கட்டிட கட்டுமானப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

தொடர்ந்து, கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய உதவி பொறியாளர் உடனடியாக அங்கு அனுப்பி வைக்கப்படுவார். தரமான கட்டிடத்தில் நெல் கொள்முதல் நிலையம் இயங்குவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x