Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM

10 நாட்களில் 70% தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் : சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை

தமிழகத்தில் 10 நாட்களில் 70 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்றசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சராசரியாக ஆண்டொன்றுக்கு 1 கோடியே 86 லட்சம் பேர் இதயநோயால் இறக்கின்றனர். இந்நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு இருதய நோய்க்கான விழிப்புணர்வு

என்பது மிக அவசியமான ஒன்றாகும். இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஆரோக்கிய மான உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, போதை வஸ்துக்கள் புகையிலை போன்றவற்றை பயன்படுத்தாமல் இருத்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

செவிலியர்கள் விவகாரம்

கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் சுயக்கட்டுப் பாடுகளுடன் அவசியம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தளர்வுகளை அறிவித்துள்ளது என்பதற்காக விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுவிடக்கூடாது.

செவிலியர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மூன்று பேர் கொண்ட குழு அமைத்து அவர்களுடன் கலந்துபேசி 15 நாட்களில் தீர்வுகாண வலியுறுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியதற்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார்கள். 4,900 செவிலியர்களைப் புதியதாக எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த செவிலியர்களில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக தெரிவித்திருக்கிறோம்.

5 கோடியே 29 லட்சம்

இந்திய அளவில் தமிழகம் தடுப்பூசி செலுத்துவதில் 8 அல்லது 9 இடத்தில் இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 5 கோடியே 29 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளபடி 70 சதவீதம் என்ற இலக்கினை அடைய இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x