அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டது : செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டது :  செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்
Updated on
1 min read

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

அதிமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் வளர்மதி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் குமார் ஆகியோர் மதுரை சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.

பின்னர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் அதிமுகவை 31 ஆண்டுகள் ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்தார்கள். அதிமுகவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கொண்டவர்கள்.

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டது. அவர்கள் விலகிய பிறகு பேசும் கருத்துகளுக்கு எப்படி பதில் சொல்ல முடியும். பாமகவினர் பேசுவதற்கு அதிமுக தலைவர்கள் பதில் சொல்வார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அம்மா உணவகத்தை தமிழக அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. போராட்டம், ஆளுநரை சந்திப்பது என செயல்படுகின்றனர் என்ற கேள்விக்கு, ‘‘பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கும். யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. மக்களைக் கவரும் வகையில், எண்ணத்தை பிரதிபலிக்கிற போராட்டத்தை, அரசுக்கு வலுவான கருத்தை எடுத்துரைக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். எப்போதும் போராட்டம், போராட்டம் என்று மக்களை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in