Published : 26 Nov 2021 03:11 AM
Last Updated : 26 Nov 2021 03:11 AM

கண்காணிப்பு விழிப்புணர்வு வார போட்டியில் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கல் : தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பாராட்டு

'இந்து தமிழ் திசை' மற்றும் காமராஜர் போர்ட் நிறுவனம் இணைந்து நடத்திய கண்காணிப்பு விழிப்புணர்வு வார போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் காமராஜர் போர்ட் லிமிடெட் நிறுவனம் இணைந்து, ‘கண்காணிப்பு விழப்புணர்வு வாரம்’ கடந்த அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, இணையவழி மூலமாக பள்ளி மாணவர்களுக்கு, புதிய இந்தியாவை உருவாக்கு – ஊழலை ஒழித்தல்’ எனும் தலைப்பில் கட்டுரை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) போட்டியும் மற்றும் ‘ஊழல் இல்லாத இந்தியா’ எனும் தலைப்பில் ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.

மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தி.மலையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் தலைமை வகித்தார். காமராஜர் போர்ட் லிமிடெட் முதுநிலை மேலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இந்து தமிழ் திசையின் முதுநிலை விற்பனை அலுவலர் சுரேஷ் வரவேற்றார்.

தமிழ் வழி கட்டுரை போட்டியில், ராணிபேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகீரதன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி தேவதர்ஷினி, திருவண்ணாமலை எஸ்ஆர்ஜிடிஎஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி, திருவலத்தில் உள்ள பூர்ண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் சந்துரு ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

ஆங்கில வழி கட்டுரை போட்டியில் திருவண்ணாமலை காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி சரண்யா, காட்பாடி குளூனி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் பிளஸ் 2 வகுப்பு மாணவர் ஹரிஷ், தி.மலை எஸ்ஆர்ஜிடிஎஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி ஹரினி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

ஓவியப் போட்டியில் தி.மலை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி தமிழரசி, வேலூர் செவன்த்டே பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி பூஜா, தி.மலை மாவட்டம் செம்மம் பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவி பூஜா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

மேலும், திருவண்ணாமலை காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி சரண்யா, மாநில அளவில் 3-ம் இடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (பயிற்சி) சுகப்பிரியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x