Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

மின்னணு முறையில் - ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் : ஓய்வூதியதாரர்களுக்கு சென்னை துறைமுகம் அறிவுறுத்தல்

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், கப்பற்கூட வாரியம் ஆகியவற்றில் ஓய்வு பெற்றவர்களுக்கான 2021-ம் ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நவ.1-ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. எனவே, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி சமர்ப்பிக்க வேண்டும்.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் ஆயுள் சான்றிதழை கணினி மூலம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம். இதற்காக, www.jeevanpraman.gov.in என்ற இணையதளத்தில் Local a Centre என்பதை கிளிக் செய்து உங்கள் பகுதியின் பின்கோடை பதிவு செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள அங்கீகாரம் பெற்ற மையங்களில் ஓய்வூதிய புத்தகம், வங்கி பாஸ்புக், ஆதார் போன்ற தேவையான ஆவணங்களுடன் சென்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதியில் உள்ள அங்கீகாரம் பெற்ற மையத்தை அறிந்து கொள்ள 7738299899 என்ற செல்போன் எண்ணுக்கு JPL பின்கோடு என்பதை டைப் செய்து அனுப்பி அறிந்து கொள்ளலாம்.

இதைத் தவிர, www.chennaiport.gov.in என்ற இணையதளத்தில் இருந்து ஆயுள் சான்றிதழ் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் தங்களின் புகைப்படத்தின் மீது ஓய்வூதியத் தொகை பெறக்கூடிய வங்கி மேலாளரிடம் கையெழுத்து பெற வேண்டும்.

படிவத்தை கொரியர் அல்லது விரைவு தபால் மூலம் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக அலுவலகத்துக்கு வரும் டிச.31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

ஆயுள் சான்றிதழை நேரில் வந்து சமர்ப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x