

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ள தால் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதனால் நேற்று மாட்டுத்தாவணி மலர்ச் சந்தையில் பூக்கள் வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் அதிகள வில் குவிந்தனர்.
கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ 1400 ரூபாய் விலை உயர்ந்து 2,000 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற் பனையான மெட்ராஸ் மல்லி 1,000 ரூபாய்க்கும், 1,000 ரூபாய்க்கு விற் பனையான கனகாம்பரம் 2,000 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ 1,300 ரூபாய்க்கும், 800 ரூபாய்க்கு விற்பனையான முல்லை 1,500 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனையான அரளி பூ 250 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி பூ 120 ரூபாய்க்கும்,100 ரூபாய்க்கு விற்பனையான பட்டன் ரோஸ் 180 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்பனையான சென்ட் பூ 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனையான செவ்வந்தி பூ 250 ரூபாய்க்கும் விற்பனையானது. வழக்கமாக மலர்ச் சந்தைக்கு 100 டன் வரை மலர்கள் வரத்து வரும் நிலையில் நேற்று பண்டிகை காலமாக இருந்தும் 50 டன் மட்டுமே வந்தது. மேலும், மல்லிகை பூ 5 டன் வரை வரும் நிலையில் நேற்று 1 டன் மட்டுமே விற்பனைக்கு வந்தது. தொடர் மழை காரணமாக பூக்கள் வரத்து 50 சதவீதமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.