Published : 04 Nov 2021 03:14 AM
Last Updated : 04 Nov 2021 03:14 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் - பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம் : 3 நாட்களுக்கு நடைபெறும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கிராம வருவாய் அளவில் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர்அமர் குஷ்வாஹா கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த முகாம்களில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கணினி பதிவேற்றலில் ஏற்பட்டுள்ள சிறு பிழைகள், பட்டா வரப்பெறாமல் உள்ள இனங்கள், பட்டாதாரர் பெயர் கணினி பதிவேற்றத்தில் மாறிஉள்ள இனங்களுக்கு தீர்வு காணப்பட உள்ளன. நாளை வெள்ளிக்கிழமை 5-ம் தேதி நடைபெற இருந்த சிறப்பு முகாம் வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.

மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் வரும் 9, 10 மற்றும் 12-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளன. அதன்படி, திருப்பத்தூர் வட்டத்துக்கு உட்பட்ட பெரியகரம், நரியநேரி, பதனவாடி ஆகிய கிராமங்களுக்கு நரியநேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நவம்பர் 9-ம் தேதியும், லக்கிநாயக்கன் பட்டி, காக்கங்கரை, சின்ன கண் ணாலப்பட்டி, பெரியகண்ணாலப் பட்டி, எர்ரம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு காக்கங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் வரும் 10-ம் தேதியும், நத்தம், நரவிந்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சுந்தரம்பள்ளி, ஆவல்நாயக்கன் பட்டி ஆகிய கிராமங்களுக்கு சுந்தரம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வரும் 12-ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமுக்கு மாவட்டவழங்கல் அலுவலர் விஜயன் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப் பட்டுள்ளார்.

அதேபோல, நாட்றாம்பள்ளி வட்டத்துக்கு உட்பட வேட்டப்பட்டு கிராமத்துக்கு வேட்டப்பட்டு சந்தன்வட்டம் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் வரும் 9-ம் தேதியும், ஆத்தூர்குப்பம், குடியாணகுப்பம் கிராமத்துக்கு விஏஓ அலுவலகத்தில் வரும் 10-ம் தேதியும், பணியாண்டப்பள்ளி கிராமத்துக்கு ஜெயபுரம் விஏஓ அலுவலகத்தில் வரும் 12-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்டும். இந்த முகாமுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலு வலர் பூங்கொடி கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப் பட்டுள்ளார்.

வாணியம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட அலசந்தராபுரம், நாராயணபுரம், கொல்லப்பள்ளி, வெங்கடராஜபுரம், ஜே.ஆர்.சமுத்திரம் ஆகிய கிராமங்களுக்கு அலசந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரும் 9-ம் தேதியும், பீமகுளம், நாயக்கனூர் கிராமங்களுக்கு பீமகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வரும் 10-ம் தேதியும், கிரிசமுத்திரம், நெக்கனாமலை கிராமங்களுக்கு கிரிசமுத்திரம் பாரத கோயில் அருகாமையில் வரும் 12-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானுமதி கண்காணிப்பு அலு வலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட மேல்சாணாங்குப்பம், பாப்பனப்பள்ளி, மணியாரகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு மேல்சாணாங் குப்பம் விஏஓ அலுவலகத்தில் வரும் 9-ம் தேதியும், பெரிய கொம்மேஸ்வரம், பார்வதம் பட்டரை, சாத்தம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு சாத்தம்பாக்கம் விஏஓ அலுவலகத்தில் வரும் 10-ம் தேதியும், கரும்பூர், கதவாளம், பார்சனப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு கரும்பூர் சமுதாயக்கூடத்திலும், காரப்பட்டு கிராமத்துக்கு அரங்கல்துருகம் ஊராட்சி சேவை கட்டிடத்தில் வரும் 12-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமுக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆகவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் வசித்து வரும் பொதுமக்கள் அந்தந்தப்பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள வரும்போது தங்களது நிலம்/பட்டா தொடர்பான அசல் ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் மனு அளித்து பயன்பெற வேண்டும்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x