இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்து - திருப்பத்தூரில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம் :

ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.படம்:ந.சரவணன்.
ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.படம்:ந.சரவணன்.
Updated on
1 min read

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாமகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை அரசாணையிலும் வெளியிட்டது.

இதற்கிடையே, வன்னிய சமூகத்துக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும், எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிக்கை வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட 25 மனுக்கள் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நிலுவையில் இருந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை நேற்று தீர்ப்பு வழங்கியது.

இதனை கண்டித்து திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக முன்பாக பாமகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கிருபாகரன் தலைமை வகித்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டு உயர் நீதிமன்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ டி.கே.ராஜா, மாநில துணைத்தலைவர் பொன்னுசாமி, மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in